புதுடில்லி, மே 24 வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு,தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வக்ஃபு சட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது. தடையை தொடர்வதா என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்றத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், “ஒன்றிய அரசு நிலத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய வக்ஃபு சட்டம் உள்ளது. எந்த நிலத்தையும் அரசு எடுத்துக்கொள்ளும் நிலையை வக்ஃபு திருத்தச் சட்டம் செய்துள்ளது. பிரச்சினையை தீர்க்கும் வரை அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் உள்ளது.
200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக் கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும்.புதிய சட்டத்தின்படி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அது வக்ஃபு சொத்தாக கருதப்படாது. சொத்து மீது முடிவெடுக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் செய்யப்படவில்லை. வக்ஃப் சொத்துக்கள் மீதான உரிமையை நிலைநாட்ட புதிய சட்டத்தில் வழி இல்லை,” இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில், “புதிய வக்ஃபு சட்டத்தை பொறுத்தவரை எந்த அரசமைப்பு மீறலும் இல்லை. வக்ஃப் சொத்து மீது அரசு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களை நாட வழி உள்ளது,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.