சென்னை, மே 24– கால்நடை மருத்துவப் படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஎச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, உரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.
இதுபோக, தமிழ்நாடுத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி கடந்த 1903இல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.
பி.டெக். படிப்புகள்
திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பப் பிரிவில் 20 இடங்கள் உள்ளன.
இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப் படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில் நுட்பப் பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
மேற்கண்ட பிவிஎஸ்சி – ஏஎச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-2026ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) இணைய வழியில் விண்ணப்பிப்பது அடுத்த வாரம் தொடங்குகிறது.
கால்நடை அறிவியல் படிப்பு
பிவிஎஸ்சி – ஏஎச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் அய்ந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்.
பால்வளப் படிப்பு
பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்பப் படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.