கரூர், மே 23 தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 – 2025 தேதியில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
அந்தக் கார்ட்டூன் அரசுப் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மாணவர்கள் மீதும், அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதும் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் மீதும் வக்கிர புத்தி கொண்டு நஞ்சை கக்கி இருக்கிறது .
தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களையும் தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் , கல்வி அமைச்சரையும் கிண்டல் செய்கிறேன் என்ற போர்வையில் அதன் குடுமிப் பாசமும், நூல் திமிரும் நன்றாகத் தெரிகிறது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நன்றாக படித்து முன்னேறி வருவதை துக்ளக் வகையறாக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
அதுவும் குறிப்பாக இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு சமூக நீதிக் கண்ணோட்டத்தில் செயல்படுத்தி வருகின்ற பல திட்டங்கள் துக்ளக் வகையறாக்களுக்கே எரிச்சலாக இருப்பது , நம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றாகத் தெரிகிறது .
தந்தை பெரியாரின் பார்வையில் சொல்வதென்றால், துக்ளக் போன்ற பார்ப்பன பத்திரிகைகள் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ்நாடு அரசையும், அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், கல்வி அமைச்சரையும் பாராட்டினால் தான் நாம் சந்தேகப்பட வேண்டும். மாறாக இந்த பத்திரிகைகள் வசை மாறி வீசினால் நாம் திசை மாறி செல்லவில்லை, நாம் செல்கின்ற பாதை மிகச் சரியானது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
‘துக்ளக்’ பத்திரிகையின் வசவுகளையே வாழ்த்துகளாக எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டே இருப்பார்கள். துக்ளக் ஆதரவு வகையறாக்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டே இருப்பார்கள் என்பதையும் நாம் குறிப்பிட்டுச் சொல்கின்றோம்..
துக்ளக் பத்திரிகை இனியும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களையும், தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், கல்வி அமைச்சரையும், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் செய்த சாதனைகளையும் கிண்டல் செய்து அவதூறு பரப்பி வந்தால் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், அரசுப் பள்ளி மாணவர்களையும், அவர்களின் சாதனைகளையும், தமிழ்நாடு கல்வி அமைச்சரையும் கிண்டல் செய்து அவதூறு பரப்பி ‘துக்ளக்’ (20.05.2025) கார்ட்டூன் வெளியிட்ட செய்திக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
– ஆ.மலைக்கொழுந்தன்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.