தேவதாசி முறை ஒழிப்பில் ‘‘பிற நாட்டு புரட்சிப் பெண் ஏமிகார்மைக்கேல்’’ – அறிவோமா?

viduthalai
3 Min Read

‘கற்றது கை மண் அளவு; கல்லாதது உலகளவு’

இந்த சில வரிகளில்தான் கருத்துகளின் பேருண்மை நமக்கு எவ்வளவு அறிவூட்டுகிறது!

உலகில் எங்குமில்லாத ஓர் இழி கொடுமை, நமது குடும்பங்களில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையை கோயில்களுக்குக் காணிக்கையாக்கி, அங்குள்ள (கல்)  சாமிகளுக்குப் பொட்டுக்கட்டி – ‘தேவரடியாள்’ என்று இழிவுக்குப் புனுகு தடவி சமுதாய நோயை புரை போகச் செய்த கொடுமையை எதிர்த்து அந்நாளைய பல மனிதநேய சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்தனர்.

அதில் கிளர்ச்சி, தொடர் பிரச்சாரம், மாநாடு என அந்த இழிவை அழிப்பதில் தந்தை பெரியாருடன் – அவர் தொடங்கி நூற்றாண்டு காணும் ‘சுயமரியாதை இயக்கம்’, புதுக்கோட்டையில், அந்த ஜாதியில் பிறந்த சென்னை மாகாண  திராவிட முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அவர்கள்,  அதற்கு முன்பே தந்தை பெரியாருடன் தொண்டறத்தில் திளைத்த மூவலூர் இராமாமிர்தம்மையார், வடக்கே கவுர், நவ்வரோஜி, நீதிக்கட்சி பனகால் அரசர் போன்ற பலரும் அப்புரட்சி வீரர், வீராங்கனைகளில் உண்டு.

அதற்காக அந்தக் கோயில் ‘தேவ(ர)டியாள்’ முறையை சட்டத்துறை தடுத்து விடக் கூடாது என்று தடுப்புச் சுவர் எழுப்ப முனைந்தனர். ஸநாதனம் பேசிய, இரக்கமற்ற சத்தியமூர்த்தி, திருவாளர் ஆச்சாரியார் முதலிய பல பிற்போக்குவாதிகள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் புதுச்சேரி சமஸ்தானத்தில் தனியே சிறப்பு அனுமதி வாங்கிப பள்ளி கல்லூரிகளில் படித்து, பிறகு சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவராகி,  சட்டமன்றத்தின் (கவுன்சில்) துணைத் தலைவராகவும் திறம்பட தொண்டாற்றியவருமாவர்.

1929லேயே சென்னை மாகாண சட்டப் பேரவையில் குரல் எழுப்பி, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டப் பேராராட்டத்தைத் துவக்கி நடத்திய சில ஆண்டுகள் கழித்து அதில் வெற்றி பெற்றார்கள்.

தேவதாசி ஒழிப்பு சட்டம்பற்றி இவைதான் இதுவரை நாம் அறிந்த செய்தி!

கடந்த 18.5.2025 அன்று திருச்சியில் உள்ள நமது கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் ‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’ நடத்தினர். அதில் வகுப்பு  எடுக்க சென்ற எனக்குச் சில புத்தகங்களை சால்வைக்குப் பதில் தந்தனர். அதில் ஒன்று ‘‘தேவதாசி ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்’’ என்ற ஓர் அருமையான புத்தகம்.

அறியாத பல அறிய வேண்டிய உண்மைச் செய்திகளைக் கொண்ட அரிய நூல் அது; ஒரே மூச்சில் படித்தேன் – சுவைத்தேன்.

முனைவர் த.ஜான்சிபால்ராஜ்  என்ற பெண் எழுத்தாளரின் அரிய நூல் இது!

(நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட் வெளியீடு – 2024) பக்கங்கள் 96 தான்).

‘என்னுரை’ என்று புத்தக ஆசிரியர் கருத்துரை தொடங்கி

(1) பெண்ணும் அடிமைத்தனமும்

(2) தேவதாசி முறை

(3) விடுதலைப் போர்

(4) புரட்சிப்பெண் ஏமிகார்மைக்கேல் (ஜெர்மனி நாட்டு தொண்டறச் செம்மல் பற்றிய பல தகவல்கள்)

(5) டோனாவூர் அய்க்கியம் – காப்பகம்

(6) தேவதாசி ஒழிப்பில் தந்தை பெரியார்

(7) தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்

துணைநூல் பட்டியல், படங்கள் முதலியவை.

தேவதாசி முறையை ஒழித்துக் கட்ட தந்தை பெரியாரும், மூவலூர்  இராமாமிர்தம் அமமையார், டாக்டர் முத்துலட்சமி, சுயமரியாதை இயக்கம் போராடியபோது அதனை எதிர்த்து அம்முறை தேவை  என்று வாதாடிய சத்திய மூர்த்திகளுக்கும், ஸநாதனவாதிகளுக்கும் ‘அம்புகளாக’ப் பயன்பட்டது யார் தெரியுமா? முப்பால் இளைஞர்களே, தெரிந்து கொள்ளுங்கள்!

அப்பொட்டுக் கட்டிக் கோயிலில் தேவதாசி களான, தாசித் தொழில் புரிந்தப் பெண்களானப் பலருமே ஆவர்!

வியப்பாக இருக்கிறதா?

நம்மிடம் இன்றும் இடஒதுக்கீட்டின்படி படித்துப் பட்டம் பெற்று ஒடுக்கப்பட்ட ஜாதியில் டாக்டர்களாகிய சிலரும் ‘கோடாரிக் காம்புகளாகி’ இடஒதுக்கீடு கூடாது என்று கூறும்போது; ‘அக்காலத்து அறியாமைகள்’  சொல்லியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *