இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சாமியார் ராம்பத்ராச்சாரியாருக்கு – சமஸ்கிருத இலக்கியத்தை வளர்க்க ஊக்குவித்தும் – மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க அவர் எடுத்த முயற்சிக்காகவும் ஞானபீட விருது வழங்கி சிறப்பித்துள்ளாராம்.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உயரிய பதவியில் உள்ள ஒருவர் – முழுமையான எதிரான நடவடிக்கையில் இறங்கும், தன்னுடைய செயல்கள் மூலம் சமத்துவ சகோதரத்துவம் எதுவும் இல்லை, வருணாஸ்ரம முறைதான் இந்தியாவை உயர்த்தும் உன்னத வாழ்க்கை முறை என்று வெளிப்படையாகக் கூறும் ஒருவரை அழைத்து விருது வழங்குவது சரியானது தானா?
இராமர்கோவில் கட்ட சில காலம் அரசமைப்புச் சட்ட விதிகளை நிறுத்திவைக்கவேண்டும், தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்றெல்லாம் கூறியவர் இவர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆசிரியராகக் கூடாது; அவர்கள் உயர்ஜாதி ஆசிரியர்களிடம் கற்பது நல்லது, வருண விதிமுறைகளை மாற்றும்போது நாட்டில் அமைதியின்மை ஏற்படுகிறது என்றும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ஊக்கம் கொடுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அரசமைப்புச் சட்டத்தையே ஏற்காத ஒருவருக்குக் குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்படுவது வேதனைக்குரியது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை, மனிதநேயம் மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்தத்தின் உணர்வை வளர்ப்பது என்பன கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்குஇன்றியமையாதது.
அறிவியல் மனப்பான்மை என்பது உண்மையை ஆராய்ந்து, சான்றுகளின் அடிப்படையில் நம்பிக்கைகளை உருவாக்கும் திறனைக் குறிக்கும். மூடநம்பிக்கைகளை தவிர்க்க உதவுகிறது. தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.
ஆனால் ஒன்றிய அரசின் அனைத்து மட்டமும் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கிறது. இதனால் நமது நாட்டின் இளைய தலைமுறையினர், குறிப்பாக வடக்கே, மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வட இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும் தடைபட்டுள்ளது.
சாமியார் ராமபத்ராசர்யர் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் நிதி குறித்தும் சமூகநல அமைப்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்துள்ளன.
சாமியார் ராமபத்ராசர்யர் குறிப்பாக வருணாஸ்ரம முறையில் தீவிரமான பற்றுக்கொண்டவர். அவரது ஆன்மீக செயல்பாடுகள் அறிவியல் மனப்பான்மைக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளன.
தீண்டாமை சட்டப்படி குற்றமானது; எந்த விதத்தில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு.
அந்தப்படிப் பார்த்தால் வருணாசிரமம் பேசும் இந்த சங்கராச்சாரியார்கள் வெளியில் நடமாடக் கூடாதவர்கள்; மாறாக சிறைக் கொட்டடியில் இருக்க வேண்டியவர்கள்.
இத்தகைய குற்றவாளி ஒருவருக்குக் குடியரசுத் தலைவர் ‘ஞானபீட விருது’ வழங்கி சிறப்பிக்கிறார் என்றால் நாடு எந்தத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது? தேசிய கல்வி என்ற பெயரால், விஸ்வ கர்மா யோஜனா என்ற பெயரால் குருகுலக்கல்வி கொண்டு வருவது எல்லாம் இந்த அடிப்படையில்தான்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி ஆட்சி ஒரே மதம் – இராமராஜ்ஜியம் என்ற கொள்கையைக் கொண்டதால், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
குடியரசுத் தலைவரையும் இவர்களின் மதச் சார்புக்குப் பகடையாகப் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல – வேலியே பயிரை மேயக் கூடாதல்லவா!