ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்

Viduthalai
2 Min Read

மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப் பிராயத்துக்குப் போகத்தான் பயன்படுகின்றது.

நம் மக்களின் அறிவை வளர்க்க, நல்ல நிலைக்குத் திருப்பிவிட எவனும் தோன்றவும் இல்லை. பாடுபடவு மில்லை. எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், தெய்வீக அம்சம் பொருந்தியவர்கள், ரிஷிகள் தோன்றினார்கள். ஒருவன்கூட இந்தப் பணிக்கு உதவவில்லை. மாறாக, நம்மை மடமையில் ஆழ்த்தத்தான் பயன்பட்டார்கள்.

நாங்கள்தான் மக்களுக்கு அறிவு ஏற்படும்படி தொண்டு செய்கின்றோம். எனது அனுபவத்தையும், அரசியலில் நான் கண்ட பித்தலாட்டமும் கண்டுதான் எனது பணியை மக்களை அறிவு பெறும்படிச் செய்து சிந்திக்கச் செய்யக்கூடிய வேலையினை மேற்கொண்டு விட்டேன்.

எனக்கு மேம்பட்ட அறிவாளிகள், விஷயங்கள் தெரிந்த வர்கள் ஏராளம் இருந்தாலும் ஒருவனும் இந்த வேலைக்குத் துணியவில்லையே.

இந்த நாட்டில் சோத்துக்கும், கூழுக்கும் மக்களுக்கு வகை இல்லை என்றால் எப்படி? இருக்கின்றதைப் பங்கிட்டுக் கொடுத்தால் உணவுப் பண்டம் பற்றாதா? ஏன் இல்லை? இருக்கிறதைப் பங்கிட்டுக் கொடுத்தால் செல்வம் போதாதா? மக்களுக்கு வீடு இல்லை, வீடு இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தால் வீடு போதாதா? இருந்தும் பின் எது இல்லை? அறிவு என்பது ஒன்றுதானே இல்லை. இந்த அறிவு ஏற்பட எங்களைத் தவிர எவன் பாடுபடுகின்றான்? “உங்களுக்குச் சோறு வேண்டுமா? எனக்கு ஓட்டு  கொடு. உங்களுக்குப் பணம் வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு. உங்களுக்கு வீடு வேண்டுமா? எங்களுக்கு ஓட்டு கொடு!” என்று பித்தலாட்டமாகக் கூறி ஓட்டுக் கேட்கத்தான் வருகின்றார்களே ஒழிய, எவன் உண்மையை எடுத்துச் சொல்லுகின்றான். மனிதனுடைய அறிவு கோயிலிலோ, குளத்திலோ, புராணங் களிலோ இல்லை. ஆராய்ச்சியில், சிந்தனையில்தான் உள்ளது.

தோழர்களே! இன்றைய அரசியல் என்ன? எந்தக் கட்சிக் காரன் ஆனாலும் தேர்தலில் ஜெயிக்கணும் என்பதே நோக்கமா யிருக்கிறான். இதைத் தவிர, எவனாவது கொள்கையைச் சொல்லுகிறானா?

(ஜனவரி 19, 24, 26 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய விளக்கவுரை –

‘விடுதலை’ 07.02.1964)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *