நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும்.
நமது தோழர்கள்தான் கடவுள், மதம், சாஸ்திரம், முன் ஜென்மம், பின்ஜென்மம், முன்னோர்கள் நடப்பு இவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். எங்களுடைய வேலை எல்லாம் மக்கள் சமுதாயத் தில் உள்ள மடமைகள், காட்டுமிராண்டித் தனங்கள் முதலியன ஒழிக்கப்பட வேண்டும் என்பதும்,
மக்கள் பகுத்தறிவு உணர்ச்சியுடையவர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதும்தான் ஆகும். சாதாரணமாக ஜவுளிக் கடையில் ஒரு கெஜம் துணி வாங்குவதாக இருந்தாலும் பல கடைகளில் பார்க்கின்றோம். துணி கெட்டியானதா? சாயம் நிற்குமா? சரியான விலையா? என்று யோசனை பண்ணி பார்த்துத்தான் வாங்குகின்றீர்கள்.
அதுபோலவே ஒரு திருகாணி வாங்கப் போனாலும் இது நல்ல தங்கமா, கலப்பா என்று உரைத்துப் பார்த்து வாங்கு கின்றீர்கள். இப்படி ஒரு கெஜம் துணிக்கும், சிறு திருகாணிக்கும் சிந்திக்கிற அறிவு, கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற சங்கதிகளில் நீங்கள் சிந்திக்க மறுக்கின்றீர்கள். கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகின்றீர்கள்.
இதன் காரணமாக தான் நாம் இந்த 1964-ஆம் ஆண்டிலும்கூட காட்டுமிராண்டிகளாக உள்ளோம்.
இப்படி இறந்தவர்க்கு ஒரு ஆண்டு கழித்ததும் எங்கள் கழகத்தாரைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் பார்ப்பானைக் கூப்பிட்டு திவசம் பண்ணுகின்றீர்கள். திவசம் பண்ணுவது என்றால் என்ன? பார்ப்பானைத் தமது தந்தையாகப் பாவித்து அவனுக்கு வழிபாடு செய்வது. அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் முதலிய வைகளை மூட்டை கட்டிக் கொடுப்பது ஆகும்.
நம் நாட்டவர்கள் உருவத்தில்தான் மனிதர் களே ஒழிய, அறிவில் மனிதத் தோல் போர்த்திய மாடாகத்தான் உள்ளோம். நமக்குக் கவலையெல் லாம் மதம், ஜாதி, கடவுள் இவை பற்றித்தான். இவற்றை யெல்லாம் உண்டாக்கியவன் அயோக்கியன், நாணயமற்றவன் என்பதை அறிவு கொண்டு நாம் சிந்திப்பதில்லை.
துலுக்கன், கிறிஸ்தவன் இடத்தில் மடத்தனம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும், அவர்கள் நம்மைவிட எவ்வளவோ முன்னுக்கு வந்து விட்டார்கள். நாம் மட்டும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த மாதிரியே காட்டு மிராண்டியாக இருக்கிறோம்.
நமக்கு உள்ள முதல் கேடு, கடவுள் நம்பிக் கையே. கடவுளை உண்டாக்கியவன் உலகத்தில் நடக்கிற காரியங்கட்கு காரணம் தெரியாத ஒரு முட்டாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி முட்டாள் செய்த கடவுள் நம்பிக்கையைக் கூட மன்னிக்கலாம். ஆனால், ஆத்மா, மோட்சம், பாவம், நரகம் இவற்றை உண்டு பண்ணியவன் மகா அயோக்கியன் ஆவான். இதுதான் மனிதனை மடையனாகவும், பேராசைக்காரனாகவும் ஆக்கியது. திதி, திவசத்திற்கு அடிப்படை, ஆத்மா உண்டு என்கிற நம்பிக்கைதான். ஆத்மா, சூட்சும சரீரமாக இருந்து மேல் உலகத்திற்குப் போகிறது என்றால் நாம் நம்பலாமா? என்று எடுத்துரைத்தார்.
(12.9.1964 அன்று லால்குடி வட்டம், புஞ்சை சங்கேந்தியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 12.10.1964)