கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை

viduthalai
2 Min Read

சென்னை, மே 22  கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

கணுக்காலில் பிரச்சினை

காஞ்சிபுரத்தை சேர்ந்த இணையர் சின்ராஜ் – பவானி. அங்குள்ள பல்பொருள் அங்காடி யில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒன்றரை வயது குழந்தை தியாஷ் சந்திரன். வலது கணுக்காலில் பிரச்சினை ஏற்பட்டு, கால் வளைந்ததால் நடக்க முடியாத நிலையில் இருந்தார். குழந்தையை பெற்றோர் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஆர்.மணி, ஒருங் கிணைப்பு அதிகாரி மருத்துவர் ஆனந்த்குமார் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிக்காட் டுதலின்படி, கை மற்றும் மறு சீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஆர்.சிறீதர், மயக்க மருத்துவ நிபுணர் மருத்துவர் ஜி.கே.குமார் உள்ளிட்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வளைந்த காலில் கம்பி பொருத்தி நேராக்கி, பற்றாக்குறையாக இருந்த சதைகளுக்காக, இடது தொடையில் இருந்து திசுக்களை எடுத்து வைத்து, ரத்தக்குழாய்கள், நரம்புகளை இணைத்து, குழந் தையின் பிரச்சினையை சரிசெய்தனர்.

6 மணி நேரம் அறுவை சிகிச்சை

இதுதொடர்பாக மருத்துவ மனையின் கை மற்றும் மறுசீர மைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஆர்.சிறீதர் கூறிய தாவது:

தாயின் நிறைமாத கர்ப்பத்தில் இருந்த குழந்தை மலம் கழிக்க வாய்ப்பிருந்தது. மலத்தை குழந்தை விழுங்கிவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சிசேரியன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. பிறந்த 5-ஆவது நாளில் குழந்தையின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையில் வலது காலில் பிரச்சினை ஏற்பட்டு, கால் வளைந்து, நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் சிகிச்சைக்காக, இந்த மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சை என்பது மிகவும் அரிதான, கடினமானது. ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்தக்குழாய் எல்லாம் மிகவும் சிறியதாக இருக்கும். அந்த ரத்தக்குழாய்களை ஒன்று சேர்க்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தைக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.

தலை முடியை விட மெல்லிய தையல் போடப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடந்தது. மூன்று வாரம் குழந்தையை மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். பின்னர், காலில் பொருத்தப்பட்டுள்ள கம்பியை எடுத்துவிடுவோம். அதன் பிறகு குழந்தை நடக்க தொடங்கும். குழந்தை வளர வளர காலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சதையும் வளரும். மீண்டும் இந்த பிரச்சினை குழந்தைக்கு வராமல் இருக்கும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *