வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, மே 22 ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

வக்ஃபு திருத்த சட்டம்

மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி) சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலால், இந்திய-பாகிஸ்தான் இடையே போர் தொடங்கியதால் போராட்டம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்குகிறது.

இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் தேசிய செய்தித் தொடர்பாளரும், வக்ஃபு சட்டப் போராட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சையத் காசிம் ரசூல் இலியாஸ்   கூறும்போது, ’’ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுக் கூட்டங்கள், போராட் டங்கள் மற்றும் பேரணிகளை வாரியம் ஒத்தி வைத்தது.

வக்ஃபு சொத்துகளை காக்கும் போராட்டத்தை மீண்டும் நடத்தும் வகையில், பொது நிகழ்ச்சி களுக்கான திட்ட வரைவை வாரியம் தயாரித்துள்ளது. இதில், சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, வாரியத்தின் முக்கிய கவனம் பீகார் மீது இருக்கும்’’ என்றார்.

பிஹாரின் பாட்னா, அராரியா, கிஷன்கஞ்ச், பாகல்பூர், பெகுசராய், சஹர்சா, மதுபனி, சிவான் மற்றும் தர்பங்கா போன்ற பல்வேறு நகரங்களில் இப்போராட்டம் முதலில் தொடங்கப்படும். இதற்கான பொறுப்பு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் இமாரத்-இ-ஷரியா எனும் முஸ்லிம் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

இதையடுத்து மே 22-இல் அய்தராபாத்தில் பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் வரும் மே 30-இல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மே 23-இல் மகாராஷ்டிராவின் ஜல்காவ்னிலும், மே 24-இல் நான்டெட்டிலும், மே 25-இல் அவுரங்காபாத்திலும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது தவிர, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்திலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம், அரசாங்கத்தால் வக்ஃபு திருத்த சட்டத்தின் மீது பரப்பப்படும் குழப்பங்கள் நீங்கும் என்றும் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *