லக்னோ, மே.22- உத்தரப்பிரதேச மாநிலம் காஷிபூர் மாவட்டத்தில் உள்ளது நர்வார் கிராமம். இங்குள்ள கோவில் விழாவில் சப்பரம் கட்டும் பணி நடந்து வந்தது. நேற்று (21.5.2025) அதிகாலையில் பக்தர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டு இருந்தபோது, சப்பரம் கட்டும் கம்பி ஒன்று, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியுடன் உரசியதால், அதில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பக்தர்கள் சிலரை மின்சாரம் தாக்கியது. இதில் திருவிழாவுக்கு விடுமுறையில் வந்திருந்த காவல்துறை காவலர் ரவீந்திர யாதவ் (வயது 38), அவரது சகோதரர் அபய் யாதவ் (24), சோடேலால் யாதவ் (35), அமன் யாதவ் (20) ஆகிய 4 பக்தர்கள் நிகழ்விடத்திலேயே மின்சாரம் தாக்கி இறந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.