புதுடில்லி, மே 22 தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறு வனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் முறை கேடு நடந்ததாக அமலாக்கத் துறை நடத்தி வந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘‘சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவ னத்தையும் எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்‘‘ என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான கடைகளுக்கு போக்குவரத்து டெண்டர்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை மார்ச் மாதம் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் முடிவில், மதுபாட்டி லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியதாகவும், கொள்முதலை குறைத்துக்காட்டி யுள்ளதாகவும் அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. மேலும், பணியிட மாற்றம் மற்றும் குடிப்பக (பார்) உரிமம் உள்ளிட்டவற்றுக்காக லஞ்சம் பெறப்பட்டதாகவும், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு
அமலாக்கத் துறையின் இந்த குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மறுத்தது. மாநில அரசின் அனு மதியின்றி அமலாக்கத் துறையால் இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது கூட்டாட்சி கொள்கையை மீறிய செயல் என்று கூறி, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிறுவனமும் வழக்கு தொடுத்தன.
சோதனை நடத்தும்போது உரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்காமல் அலுவல கத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியதாகவும், ஊழியர்களை சட்டவிரோதமாக சிறைபிடித்து துன்புறுத்தியதாகவும் டாஸ்மாக் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரி வித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் மற்றும் மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது. பொருளாதாரக் குற்றங்கள் ‘‘நாட்டுக்கு எதிரான குற்றங்கள்’’ என்றும், பணமோசடி தொடர்பான புகார்களை எந்தத் தடையும் இன்றி விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பி ஆர் கவாய் கூறியதாவது “முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.