மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொற்றா நோய்களான நீரிழிவு (சர்க்கரை) நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், 2021இல் துவங்கப்பட்டது. இதில், 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய்த் தடுப்பு சிகிச்சை செவிலியர்கள், 463 ‘பிசியோதெரபிஸ்ட்’கள், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் களுக்கான மருந்துகள் வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சை மற்றும் தொடர் டயாலிசிஸ் திரவ பைகள் வழங்குதல், குழந்தைகளின் பிறவிக் குறை பாடுகளைக் கண்டறிந்து, தொடர் சிகிச்சைக்கு உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இத்திட்டத்தில், 2.25 கோடி பயனாளிகள் முதல் முறை சிகிச்சையும், 4.44 கோடி பேர் தொடர் மருத்துவ சேவைகளையும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழவு நோயாளிகள் பலர், அரசு மருத்துவமனைகளுக்கு வரத் துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
‘‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை, 721 கோடி ரூபாயை அரசு செலவிட்டு உள்ளது. இத்திட்டத்தில், புதிதாக நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மற்ற தீவிர பாதிப்புக்கு ஆளாகாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் மாதம், 3,000 ரூபாய் வரை மருத்துவச் செலவு செய்து வந்தவர்களுக்குத் இத்திட்டத்தில் வீடுகளுக்கே மருந்து, மாத்திரைகள் வருவதால், அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும், 45.5 சதவீத உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 33.9 சதவீதமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 54.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இத்திட்டத்தால், தொற்றா நோய்ப் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இவர்கள் முறையாக மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன், மருத்துவர் பரிந்துரைப்படி உடற்பயிற்சி செய்வதும், உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதும் நல்லது.’’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவிலேயே கல்வியிலும் சரி, மருத்தவத் துறையிலும் ‘திராவிட மாடல்’ அரசு நடத்தும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகக் கொடி கட்டிப் பறக்கிறது.
இவ்வளவுக்கும் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை – அதிலும் குறிப்பாக பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் எதிரான திராவிட சித்தாந்தத்தைக் கொண்ட தமிழ்நாடு அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது.
சட்டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக்கூடத் தர மறுக்கிறது. இந்தியாவிலேயே ஜி.எஸ்.டி. மூலம் ஒன்றிய அரசுக்கு நிதி அளிப்பதில் மகாராட்டிரத்துக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு அரசுதான். அதற்குப் பிரதி பலனாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அளிப்பது ரூபாய் ஒன்றுக்கு 29 காசுகள்தான்!
இவ்வளவு நிதி நெருக்கடி நிலையிலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே எல்லா வகைகளிலும் முன் மாதிரி மாநிலமாக, முதல் இடத்தில் பட்டொளி வீசி பறக்கும் பூமியாக இந்தத் திராவிட மண் கோலோச்சுகிறது.
காரணம் எதிலும் சரியாக திட்டமிடுதல், சீர்மை நிர்வாகம் இவை இரண்டும் இரு சக்கரங்களாக சரியாகச் சூழன்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த மக்கள் நல அரசை அடுத்தடுத்த தேர்தல்களிலும் தங்களுக்கான அரசாக வெகு மக்கள் தேர்வு செய்வார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்!