சென்னை, மே 21– அய்எப்எஸ் தேர்வு முடிவு 19.5.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 10 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாணவி நிலா பாரதி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் அய்எப்எஸ் (இந்திய வனப்பணி) பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு (2024ஆம் ஆண்டுக்கானது) 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது.
முதலில் முதல்நிலை தேர்வு எழுத்து நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி மெயின் தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது. இந்த நிலையில் நேர்முக தேர்வு முடிந்து யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் இறுதி தேர்வு முடிவை வெளியிடப்பட்டது.
இதில், இந்தியா முழுவதும் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் 4 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் கவிஞர் வெண்ணிலா – முருகேசன் வாழ்விணையரின் மகள் நிலா பாரதி முதல் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் அகில இந்திய அளவில் 24ஆவது இடம் பிடித்துள்ளார். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மய்யத்தில் பயிற்சி வழங்கப்படும். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்றார்.