மறவன் புலவு க. சச்சிதானந்தன்
வைகாசி 1 வியாழன் (15.05.2025)
மறவன் புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்.
ஆகம விதிகளுக்கு அமைந்த சைவக் கோயில்கள் உலகில் இக்காலத்தில் இல்லவே இல்லை. பல்லவர் சோழர் காலங்களில் எழுதிய ஆகம விதிகளுக்கு அமையக் கட்டிய கோயில்கள் நாயக்கர் காலங்களில் ஆகம விதி மீறலைத் தொடங்கின. பல்லவர் அமைத்த காஞ்சிபுரத்தில் அமைந்த அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயிலில் அம்மன் கோயில் இல்லை. அருள்மிகு தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் அம்மன் கோவிலைக் கட்டவே இல்லை. சிவனும் உமையும் சேர்ந்ததே இலிங்க வடிவம் என்று ஆகம விதிக்கு அமைய நாயக்கர் காலத்தில் அருள்மிகு தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்துள் அருள்மிகு அம்மன், பிள்ளையார், முருகன் கோயில்களைக் கட்டினார்கள். ஆகம விதிகளை மீறினார்கள்.
மகுடாகமத்தைப் பின்பற்றும் சிதம்பரம் அருள்மிகு சிவகாமி அம்மையார் உடனுறை நடராசப் பெருமாள் திருக்கோயில் மேலக் கோபுர வாயிலில் ஆடுகளைப் பலியிட்டுக் கொண்டிருந்தார்கள். திருக்கோயில் அறங்காவலர்களான தீட்சிதர்களின் ஒப்புதலுடன் ஆகம விதிகளுக்கு முரணாக நடக்கிறீர்கள் எனத் தீட்சிதர்களிடம் தவத்திரு ஆறுமுக நாவலர் முறையிட்டார். ஆகம விதிகளுக்கு அமைய நடக்குமாறு தீட்சிதர்களுக்கு ஆணை அதன்பின் பலியிடுதலுக்குத் தடை. ஈழத்தில் வாழ்ந்தவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார். தருமபுரம் ஆதீனத்திற்கும் சைவ சமய ஆலோசகராக இருந்தவர். ஈழத்தின் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையைத் தொடக்கி வைத்தவர் சபையின் முதல் தலைவர். திருப்பணி தொடங்கிய பொழுது நவக்கிரகங்களைக் கோயிலுள் நிலை பெறச் செய்யச் சபையினர் விரும்பினர்.
அருள்மிகு சிவன் கோயிலில் நவக்கிரக நிலையிடல் ஆகம விதிகளுக்குப் புறம்பானது எனத் தலைவர் பதவியை உதறி எறிந்தார். நவக்கிரகங்கள் அமைந்த அருள்மிகு சிவன் கோயில்கள் அனைத்துமே ஆகம விதிகளுக்குள் அடங்காத திருக்கோயில்களே. 28 ஆகமங்களும் இதைக் கூறுகின்றன. எனவேதான் சொல்கிறேன், ஆகம விதிகளுக்கு உள் அடங்கிய திருக்கோயில்கள் உலகில் எங்குமே இல்லை என.
கோலாலம்பூர் அருள்மிகு முருகன் கோயிலில் இராசராசேசுவரி திருவுருவத்தை நிலை பெறச் செய்யலாமா எனத் தருமபுர ஆதீனத்திடம் கேட்டனர். அப்பொழுது அங்கு வேத ஆகமப் பாடசாலை முதல்வராக இருந்தவர் சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியார். அருள்மிகு முருகன் கோயிலுள் இராசராசேசுவரி நிலை பெற முடியாது எனக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதுவே தருமபுர ஆதீனத்தின் நிலைப்பாடு எனச் சொன்னார். அதன்பின்னர் கோலாலம்பூரில் இருந்து சிலர் வந்தார்கள். சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியாரைச் சந்தித்தார்கள். என்ன மாயமோ தெரியவில்லை. என்ன கொடுக்கல் வாங்கல் நடந்ததோ அறிய முடியவில்லை. அருள்மிகு முருகன் கோயிலில் இராசராசேஸ்வரி நிலை பெறலாம் எனச் சிவத்திரு சுவாமிநாத சிவாச்சாரியார் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
இந்த முரண் நிலையை நானே நேரில் தருமபுர ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். தருமபுர ஆதீனம் அவரைக் கண்டித்தது. பணி நீக்கம் செய்தது போலும்! இப்பொழுது மயிலாடுதுறையில் தனியாக வேத ஆகம பாடசாலை நடத்துகிறார். ஆகம விதிகளை அவரவர் தமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள், தமது வசதிக்கு ஏற்ப ஆகமப் பத்ததிகளை எழுதிக் குவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சைவக் கோயில் எதுவும் ஆகம விதிகளுக்குள் அமையாதன என்றே மூல ஆகமங்களைப் படித்தவர்கள் சொல்வார்கள்.
ஆகம விதிகளின் மூலங்களைப் படிக்க விரும்புபவர்களுக்காக புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனம் 28 ஆகமங்களையும் வெளியிட்டுள்ளது.
சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,
காமிகம் – திருவடிகள்
யோகசம் – கணைக்கால்கள்
சிந்தியம் – கால்விரல்கள்
காரணம்-கெண்டைக்கால்கள்
அசிதம் அல்லது அசிதம் – முழந்தாள்
தீப்தம்-தொடைகள்
சூட்சுமம் – குய்யம் (அபான வாயில்)
சகசரகம் – இடுப்பு
அம்சுமதம் அல்லது அம்சுமான் முதுகு
சுப்பிரபேதம்-தொப்புள்
விசயம்-வயிறு
நிச்வாசம்- நாசி
சுவயம்புவம் – முலை மார்பு
அனலம் அல்லது ஆக்கினேயம் கண்கள்
வீரபத்திரம் அல்லது வீரம் – கழுத்து
இரெளரவம் – செவிகள்
மகுடம் -திருமுடி
விமலம் – கைகள்
சந்திரஞானம் – மார்பு
பிம்பம் -முகம்
புரோத்தகீதம் – நாக்கு
இலளிதம் – கன்னங்கள்
சித்தம்-நெற்றி
சந்தானம் – குண்டலம்
சர்வோக்தம் -உபவீதம்
பரமேசுரம் – மாலை
கிரணம் – இரத்தினாபரணம்
வாதுளம்- ஆடை
இவற்றின் படிகளை புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் விலைக்குப் பெறலாம்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சைவ சித்தாந்தத் துறைக்கு முழுத் தொகுதியையும் நான் அன்பளித்தேன்,ஆகம விதிகளுக்கு அமையக் கட்டிய கோயிலுக்கு அன்று, மனத்தால் கட்டிய கோயிலுக்கே முன்னுரிமை என்றார் சிவபெருமான்
சேக்கிழாரின் பாடல் வரிகளைத் தருகிறேன்.
பெரிய புராணம் 65ஆவது பூசலார் நாயனார் புராணம் பூசலார் நாயனார் மனத்தில் கோயில் கட்டினார். அங்கு சிவனே முழுமுதற் கடவுளாய் எழுந்தருளினார்.
பாடல் எண்: 4
அடுப்பது சிவன்பால் அன்பர்க்
காம்பணி செய்தல் என்றே
கொடுப்பதெவ் வகையுந் தேடி
அவர்கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி அய்யர்
மகிழ்ந்துறை வதற்கோர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார்
இருநிதி இன்மை யெண்ணார்.
பாடல் எண்:5
மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்துமோர் பொருட்பேறின்றி என்செய்கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதிய மெல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
பாடல் எண் : 6
சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக் கால யஞ்செய் நலம்பெறும் நன்னாள் கொண்டே
ஆதரித்து ஆக மத்தால் அடிநிலை பாரித் தன்பால்
காதலில் கங்குற் போதுங் கண்படா தெடுக்க லுற்றார்.
பாடல் எண்:7
அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
பாடல் எண் : 8
தூபியும் நட்டு மிக்க சுதையும்நல் வினையுஞ் செய்து
கூவலும் அமைத்து மாடு கோயில்சூழ் மதிலும் போக்கி
வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்
தாபனம் சிவனுக் கேற்க விதித்தநாள் சாரும் நாளில்,
பாடல் எண் :9
காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற
மாடெலாஞ் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்
நாடமால் அறியா தாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னால்
ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.
பாடல் எண் : 10
நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்.
பாடல் எண் : 11
தொண்டரை விளக்கத் தூயோன் அருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுதான் வணங்க வேண்டும் என்றெழுங் காத லோடும்
தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.