சென்னை, மே 21– தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
ஒழுங்குமுறை ஆணையம்
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்தில் ‘டான்ஜெட்கோ’ நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அதன்மீது நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பணவீக்க விகிதத்தின் படி, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.
அதேநேரம், மின்கட்டண உயர்வானது 2026-2027ஆம் ஆண்டு வரை செயல்படுத்த வும், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 2.16 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு (2024) தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
அதிருப்தி
இந்த சூழலில், நடப் பாண்டு வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் மின்கட்டணம் 3.16 சதவீதம் வரை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த கட்டண உயர்வானது வீட்டு மின் நுகர்வோர், வணிகம், தொழிற்சாலை மற்றும் பொது பயன்பாட்டு நுகர்வோர் அனைவருக்கும் பொருந்தும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சார வாரியத் துக்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
புதிய கட்டண உயர்வு திட்டம் அமலுக்கு வந்தால், கடந்த ஆண்டு சராசரியாக ரூ.1,000 மின் கட்டணம் செலுத்திய நுகர்வோர், கூடுதலாக ரூ.31.60 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கட்டணம் உயர்வு இல்லை
இதற்கிடையே போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (20.5.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எந்தவித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும், ஒழுங்கு முறை ஆணையம், மின்கட்டணம் தொடர் பான ஆணை வழங்கிடும்போதும், அதனை நடைமுறைப்படுத்தும் போதும், வீட்டு மின் நுகர் வோர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இருக்கக்கூடாது என்றும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் வணிகம், தொழிற்சாலைகள், பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணங்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.