மின்மாற்றியை சுற்றி மறைப்புகள் அசுத்தமாவதைத் தடுக்க புதிய முயற்சி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Viduthalai
2 Min Read

சென்னை, மே 20– சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின்மாற்றியை (டிரான்ஸ்ஃபார்மர்) சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டடங்களின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் மின் வாரியம் சார்பில் ஏராளமான மின் மாற்றிகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு கட்டுமானக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலும், வீட்டை விட்டு வெளியில் செல்வோரில் பலர் மின் மாற்றி அருகிலேயே சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் மின் மாற்றிகள் அமைக்கப்பட்ட பகுதிகள் குப்பைக் கழிவுகளுடன், துர்நாற்றம் வீசி, மாநகரின் அழகுக்கும், பொது சுகாதாரத்துக்கும் சவாலாக இருந்து வருகின்றன. அங்கு குப்பை கொட்டும்போதும், இயற்கை உபாதை கழிக்கும்போது, அவர்களுக்கு மின்சாரம் தாக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் வடசென்னை பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகளை சுற்றி கண்கவர் மறைப்புகளை அமைத்து வருகிறது. அதில் தற்போது சென்னை மாநகரில் உள்ள பாரம்பரிய கட்டடங்களின் மாதிரிகளையும் அமைத்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வட சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய 7 மண்டலங்களில் உள்ள 1220 மின் மாற்றிகளை சுற்றி ரூ.45 கோடியில் மறைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதை மக்களை கவரும் பகுதியாக மாற்றும் விதமாக அந்த மறைப்புகளில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது அரங்கம், புனித ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளின் மாதிரிகளை அமைத்து வருகிறோம். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வகுப்பறை பயன்பாட்டிற்கான பாடநூல் ஆசிரியர்களுக்கு வழங்கி

                                    இந்தியாவிற்கே வழிகாட்டும்
பள்ளிக் கல்வித்துறை

சென்னை, மே 20– அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க பள்ளிக்கல்வித் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணை கருவிகளை உருவாக்கும் வகையிலும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்காக கைப்பிரதி பாடநூல்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *