இந்நாள் – அந்நாள்

viduthalai
4 Min Read

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்  இன்று (20.05.1845)

19 ஆம் நூற்றாண்டில் சென்னை நகரில் கந்தசாமி மற்றும் தனலட்சுமி இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை தனது குரு ‘கவி ராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது கொண்ட பற்றின் காரணமாக ‘அயோத்திதாசர்’ என மாற்றிக் கொண்டார்.

தென்னிந்தியாவின் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். அயோத்திதாசர் தங்கள் குடும்ப மருத்துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்பு களில் குறிப்பிட்டுள்ளார்.

1885 இல் நண்பர் ஜான் ரத்தினத் துடன் இணைந்து ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழைத் தொடங்கினார்.

1890 இல் ஜாதி பேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1892 இல் நீலகிரி மாநாட்டு தீர் மானத்திலேயே அயோத்தி தாசர் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவ உரிமையையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டபூர்வமான சம உரிமை தேவை என்பதையும் அயோத்திதாசர் வலியுறுத்தி வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க, ‘ஆதிதிராவிடர்’ எனும் சொல்லை அவர் முதன்முதலில் பயன்படுத்தினார்.

அயோத்திதாசர் நீலகிரியில் தங்கியிருந்த 17 ஆண்டுகள் ‘துளசி மாடம்’, ‘அத்வைதானந்த சபை’ உள்ளிட்ட வற்றை நிறுவி, குடில் அமைத்து மருத்துவம் பார்த்தார்.  1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைத் தொடங்கினார். பின்னர் 1908 இல் அவ்விதழ் ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1898 இல் சென்னை, ராயப்பேட் டையில் ‘தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம்’ எனும் அமைப்பை நிறுவினார்.

1891-இல் இரட்டைமலை சீனிவாச னுடன் இணைந்து ஆதிதிராவிடர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார்.

தாழ்த்தப்பட்டோர் அரசியல் மற்றும் திராவிடச் சிந்தனைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.

விபூதி ஆராய்ச்சி, கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா – விடை உள்ளிட்ட சுமார் 25 நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடி களுக்கு உரை எனச் சில நூறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் ‘திரிக்குறள்’ என்ற பெயரில் எழுதிய திருக்குறள் உரையானது 55 அதிகாரங்களுடன், இவர் காலமான காரணத்தால் நின்று போனது. தமிழ்நாடு அரசு, அரசு சித்த மருத் துவமனைக்கு, அவரின் நினைவாக, ‘அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவ மனை’ எனப் பெயர் சூட்டியுள்ளது.

கைம்பெண் மறுமணம், பெண் களுக்கு தொழில்கல்வி , இட ஒதுக்கீடு, சமஉரிமை ஆகியவற்றை கோரியபடி யால் இவர் ‘தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை’ என்று அழைக்கப்பட்டார். இவரது நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக் கப்பட்டுள்ளது .

 

தென் இந்தியாவின் சாவித்திரிபாய் புலே –
டாக்டர் தருமாம்பாள் நினைவுநாள் – இன்று (20.5.1959)

இந்நாள் - அந்நாள்

சரஸ்வதி என்ற தருமாம்பாள்  தமிழ்நாட்டின் முக்கியமான சமூகச் சீர்திருத்தவாதியும், பெண்ணுரிமைப் போராளியும், மருத்துவரும் ஆவார்.

நீதிக்கட்சி, திராவிடர் கழகம், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னணி உறுப்பினராகப் பங்காற்றிய இவர், பெண் கல்வி, சமூக நீதி, ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

1951-ஆம் ஆண்டு இவருக்கு “வீரத் தமிழன்னை” என்ற பட்டம் வழங்கப்பட்டது, இது இவரது தமிழ் மொழி மற்றும் சமூக உரிமைகளுக்கான அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகிறது.

பெண்ணுரிமை மற்றும் கல்வி

தருமாம்பாள் பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்காக தீவிரமாகப் பாடுபட்டார். 1938-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் இவரும் ஒருவர். இம்மாநாட்டில் தான் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது.பெண்களின் மறுமணம் மற்றும் கலப்பு மணம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது. மகாராட்டிராவின் சாவித்திரிபாய் புலேவைப் போலவே, தருமாம்பாளும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார்.

1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய ஹிந்தி கல்வியை அறிமுகப்படுத்தியபோது, தருமாம்பாள் ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். இவர் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பட்டு அம்மாள், மற்றும் இவரது மருமகள் சீதம்மாள் ஆகியோருடன் இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் (3 வயது நச்சினார்க்கினியன் மற்றும் 1 வயது மங்கயற்கரசி) சிறை சென்றனர். திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபயணமாக வந்த 100 பேர் கொண்ட தமிழர் படையை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வரவேற்றார். இந்த இயக்கம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

தருமாம்பாள் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஜாதி ஒடுக்குமுறை மற்றும் ஸநாதன தர்மத்தை எதிர்த்து, பெண் விடுதலை மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்டார். முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி முறை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தார்.

நினைவு மற்றும் மரபு

தருமாம்பாளின் நினைவாக, தமிழ்நாடு அரசு “டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் திருமண உதவித் திட்டம்” கைம்பெண்களின்  மறுவாழ்விற்காக உருவாக்கப்பட்டது. மேலும், கரந்தையில் “டாக்டர் தருமாம்மாள் அரசு பலதொழில்நுட்பக் கல்லூரி” இவரது நினைவைப் போற்றும் வகையில் நிறுவப்பட்டது. சென்னையில் ஒரு முக்கிய சாலைக்கு டாக்டர் தருமாம்பாள் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *