சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, மே 20 இராணுவ கர்னல் சோபியா மீதான அவதூறால் இந்த நாடே வெட்கப்படு கிறது; தெரிந்தே அனைத்தையும் பேசிவிட்டு மன்னிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா-வை உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. மேலும் விஜய் ஷா மீதான புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறும் மத்தியப் பிரதேச மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் மூலமாகவே பழிவாங்கினோம்!
கடந்த மே 12 அன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கர வாதிகள்) நமது (இந்து) சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை (இராணுவ கர்னல் சோபியா குரேஷி) அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரி யையே ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை கைம்பெண்களாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியையே அவர்களுக்குப் பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இராணுவ அதிகாரிக்கும்
மத அடையாளம்!
மத அடையாளம்!
இராணுவ கர்னல் சோபியா குரேஷி இஸ்லா மியர் என்பதால், அவரைப் பயங்கரவாதிகளோடு (அவர்களும் முஸ்லிம்கள் என்பதால்) இணைத்து, பயங்கரவாதிகளின் சகோதரி என்றார். மதம் கடந்து, அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு இராணுவ வீரர்கள் பணி யாற்றி வருகின்றனர். ஆனால், அந்த இராணு வத்திற்குள்ளும் – அதிலும் கர்னல் போன்ற மிக முக்கியமான பதவியில் இருக்கும் சோபியா குரேஷியை, இந்தியர் என பார்க்காமல், முஸ்லிம் என அடையாளப்படுத்தியதோடு, பயங்கர வாதிகளின் சகோதரி என்று கொச்சைப்படுத்தியது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.
நடவடிக்கை எடுக்காத பாஜக!
மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா-வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்; அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பாஜகவோ அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. இதனால், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, அமைச்சர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்தது. தங்களின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற அடுத்த 4 மணி நேரத்திற்குள் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், “சோபியா என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். அவரிடம்நான் 100 முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என காட்சிப்பதிவு (வீடியோ) ஒன்றை வெளியிட்ட அமைச்சர் விஜய் ஷா, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு ஓடினார்.
முதலைக் கண்ணீர்; நீதிபதிகள் சாடல்
ஆனால், உச்சநீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனிடையே, விஜய் ஷா தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று (19.5.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தான், மன்னிப்பு கேட்டு விட்டதை கருத்தில் கொண்டு வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று விஜய் ஷா தரப்பில் கூறப்பட்டது. அதற்கு “நீங்கள் எங்கே மன்னிப்பு கேட்டீர்கள்? அது எந்த மாதிரியான மன்னிப்பு? மன்னிப்பு எனில் அதற்கு அர்த்தம் இருக்கிறது. வழக்கி லிருந்து விடுபட வேண்டும் என்று தான் சிலர் மன்னிப்பை கேட்கிறார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். உங்களுடையது எந்த மாதிரியான மன்னிப்பு?” என்று பாஜக அமைச்சர் விஜய் ஷா-வை நீதிபதிகள் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
மன்னிப்பை ஏற்க முடியாது
“நீங்கள் வெளிப்படுத்தியிருப்பது மோசமான கருத்துகளாகும். அது முற்றிலும் சிந்தனையின்றி பேசப்பட்டிருக்கிறது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான நீங்கள், ஒரு பொது நபரும் கூட. அப்படி இருக்கையில் பேசும்போது அந்த வார்த்தைகளின் விளைவுகளை தெரிந்து பேச வேண்டும். மக்களின் உணர்வுகள் எவ்வளவு இரக்கமின்றி புண்படுத்தப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, உங்களின் மன்னிப்புக் காட்சிப்பதிவை நாங்கள் ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டனர்.
நாடே வெட்கப்படுகிறது
அத்துடன், “நீங்கள் பேசிய கருத்துக்களை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கிறோம்” என்ற நீதிபதிகள், “ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று மூத்த அய்பிஎஸ் அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள். இப்போதைக்கு கைது நடவடிக்கை தேவையில்லை. விசாரணை முடியட்டும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். சிறப்பு புலனாய்வுக் குழு வின் அறிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறிய நீதிபதிகள், “உங்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் வெட்கப்படுகிறது. இதிலிருந்து எப்படி வெளியே வர முடியும் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எங்கள் கைகளில் எதுவும் இல்லை” என்று நீதிபதி சூர்ய காந்த் கூறினார். சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது தொடர்பாக, மத்தியப் பிரதேச மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு சில உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்தனர்.
ம.பி.யை சேர்ந்தவர்கள்
குழுவில் இருக்கக் கூடாது
குழுவில் இருக்கக் கூடாது
‘‘மத்தியப் பிரதேச கேடரில் நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அய்பிஎஸ் அதிகாரி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு உறுப்பினர்களில் யாரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும். மேலும், சிறப்பு விசாரணைக் குழு காவல்துறை இயக்குநர் தகுதி நிலையில் உள்ள அய்பிஎஸ் அதிகாரியின் தலைமையில் இருக்க வேண்டும்’’ என்றும், ‘‘மற்ற இரண்டு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுதி நிலையில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு புலனாய்வுக் குழு மே 20 (இன்று) காலை 10 மணிக்குள் அமைக்கப்பட வேண்டும்’’ என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சிறப்பு புலனாய்வுக் குழு தனது கண்டுபிடிப்புகளை, நிலை அறிக்கையில் சமர்ப்பிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அடுத்த விசாரணையை மே 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.