வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
திராவிடர் கழகம்
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்..
பாடம் 7
வரலாற்றைப் படித்தல்
16.3.2025 அன்று பிரிஸ்பேன் நகரில் நடந்த உலக மகளிர் நாள் விழாவில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினரான தோழர் கார்த்திகேயன் நாராயணன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத்தின் பணிகளையும் ஆசிரியர் ஆற்றிவரும் இணையற்ற சமூகநீதித் தொண்டினையும் பட்டியலிட்டு விளக்கினார். என்னைப்பற்றியும் கவிஞர் இரவிச்சந்திரன் அவர்களைப் பற்றியும் மிகச்சிறந்த பாராட்டுரைகள் கூறினார். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பார்த்திபன் இணைப்புரையாற்றினார். சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன் அவர்கள் தன் தலைமை உரையில் புயல் மழை ஏற்படுத்திய சந்தேகங்களைத் தாண்டி உறுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கணித்து, ஒரே வாரத்தில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தோழர் பார்த்திபன் உள்ளிட்ட பிரிஸ்பேன் தோழர்களைப் பாராட்டினார். அடுத்து உரையாற்றிய எழுச்சிக் கவிஞர் இரவிச்சந்திரன் அவர்கள், (சென்ற கட்டுரையில் நான் குறிப்பிட்ட சிறைத்துறை அதிகாரி அவர்தான்) தந்தை பெரியாரைப்பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளோடு உருக்கமான செய்திகளுடன் தன் உரையைத் தொடங்கினார். பள்ளி மாணவராக தன் இளம் வயதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகில் சங்கராபுரத்தில் உள்ள அசம்பட்டு என்ற கிராமத்திற்கு வருகை தந்த தந்தை பெரியாரைப் பார்ப்பதற்கு தன் தமிழாசிரியரோடு டிராக்டரில் ஏறிச் சென்று அய்யாவின் உரையைக்கேட்டு வியந்ததையும், தொடர்ந்து தங்கள் சொந்த ஊரான சவுந்தர்ராஜன்பாளையம் என்ற கிராமத்திற்கு தந்தை பெரியார் அழைத்து வரப்பட்ட நிகழ்ச்சியையும், அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தந்தை பெரியாரைக் கண்டவுடன் திரண்டு வந்து அவரது உரையைக் கேட்ட காட்சியையும் அய்யாவிடம் தான் கையெழுத்து வாங்கியதையும், எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனான தன்னை ‘வாங்க’ என்று அழைத்த பண்பினையும், அடுத்த ஆண்டில் ஆற்காட்டில் நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியின் மேடை எரிக்கப்பட்டதையும், மீண்டும் அங்கே மேடை அமைக்கப்பட்டு தந்தை பெரியார் முழங்கியதையும் அந்த மேடையில் ஆசிரியரை முதன் முதலாகக் கண்டதையும் அய்யாவின் கருத்துகளால் தனது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் இன்றுவரை தொடர்கிறது என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார். அய்யாவைத் தொடர்ந்து அன்னை மணியம்மையாரும் ஆசிரியர் அவர்களும் ஆற்றிய அரும்பணிகளையும் இன்று ஆசிரியரின் இணையற்ற வழிகாட்டுதல் தமிழ்ச்சமூகத்தை காப்பாற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து நான் உரையாற்றினேன். மார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்தநாள். மார்ச் 16 அவரது நினைவுநாள். திராவிடர் கழகம் உலக மகளிர் நாளை இவ்விரண்டு நாட்களை ஒட்டியே நடத்திவருகிறது. பிரிஸ்பேன் நிகழ்ச்சியிலும் இரண்டு சிறப்புகளும் இணைந்திருப்பதால், அன்னை மணியம்மையாரின் போர்க்குணம் பற்றியும் பெண்களை இழிவுபடுத்துவதற்கு ஆணாதிக்க சமுதாயம் பயன்படுத்தி வரும் அவதூறு எனும் உளவியல் தாக்குதலை அவர் எதிர் கொண்ட முறை குறித்தும், சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த அன்னை நாகம்மையார், சிவகாமி சிதம்பரனார், குஞ்சிதம் குருசாமி, போன்ற போராளிகளின் வாழ்க்கை இன்றைய பெண்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாய் அமைந்தது பற்றியும் உரையாற்றினேன்.
ஆசிரியர் அவர்கள் சிறப்புரையில் “இது அறிவார்ந்த அரங்கம்” என்று உரையைத் தொடங்கினார். அதற்கேற்ப அவரது உரை ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியரின் ஆய்வுரைபோல அமைந்தது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்ட சூழ்நிலையிலும் துணிவோடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களைப் பாராட்டி, கூட்டம் நடக்காவிட்டாலும், தோழர்களை சந்திப்போம் என்ற முடிவுடன் வந்தோம், இங்கு குடும்பம் குடும்பமாக வந்து தோழர்கள், குறிப்பாக மகளிர் கூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கான இலக்கணமாக தந்தை பெரியாருக்குப் பிடித்த “ குடி செய்வார்க்கில்லை பருவம்’’ என்ற குறளையும், மான அவமானம் பாராமல் தொண்டு செய்யும் மனநிலையும் வேண்டும் என்று எடுத்துக்காட்டினார். தந்தை பெரியார் கொள்கை இன்றைய காலத்திற்குப் பொருத்தமானதா? என்ற கேள்விக்கு இன்றைக்குதான் பெரியார் கொள்கை மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்பதற்கான விளக்கங்களை எடுத்துரைத்தார். அன்னை மணியம்மையாரின் தொண்டை நினைவு கூர்ந்தார். பெண்ணுரிமை என்றால் என்ன என்பதை விளக்கி 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும். இன்று பெண்கள் காவலர்களாக, நகராட்சித் தலைவர்களாக, மேயராக அதிகாரம் பெற்று வருவதையும் அதனை சாதித்துக் காட்டிய திராவிட மாடல் ஆட்சியையும் பொருத்திக் காட்டினார். அதே நேரத்தில் இன்று பெண்கள் பெற்ற உரிமைகளை தலைகீழாக மாற்றுவதற்கான முயற்சிகள் ஸநாதனத்தின் பேரால் நடைபெற்று வருவதையும் அதனால் இன்று பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டிய தேவை இருப்பதை எடுத்துக் கூறினார்.
“ஏதோ இப்பொழுது நாங்கள் வந்து ஆஸ்தி ரேலியாவில் தந்தை பெரியாரைப் பற்றிப் பேசுகிறோம் என்று நினைக்காதீர்கள். ஆனால் 1968 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் ஆஸ்திரேலியா வந்து விட்டார்; கேன்பராவில் இருக்கும் நேஷனல் யுனிவர்சிடியில் பேராசிரியர் ஈசா. விசுவநாதன் அவர்கள் The Political Career of EV Ramasamy Naickar” “ ராமசாமி நாயக்கரின் அரசியல் பயணம்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறார். அந்த ஆய்விற்கு ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக் கழகம் ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளது” என்று கூறி அந்த நூலை பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டினார். அந்த நூலின் தலைப்பில் நாயக்கர் என்று குறிப்பிடப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கினார்.
சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் எதற்காகத் தோற்று வித்தார் என்பதையும், ‘பிறவி பேதம்’ கூடாது என்ற தந்தை பெரியாரின் கருத்தையும் டாக்டர் அம்பேத்கர் கூறிய “ ஏணிப்படி ஜாதி அமைப்பு – Graded inequality’’ என்பதையும்்ஒப்பிட்டு ஜாதியும் பெண்ணடிமைத்தனமும் இப்போது வேறு வடிவங்களில் நுழையப் பார்ப்பதால் அதைத் தடுப்பதற்கான தடுப்பூசியே vaccination பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் என்பதையும் , பெண்குழந்தைக்குப் பிறக்க உரிமையில்லை படிக்க உரிமையில்லை வாழ்வைத் தேர்ந்தெடுக்க உரிமையில்லை என்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும், குலக்கல்வியும் ஹிந்தி ஆதிக்கமும் மீண்டும் நுழையாமல் தடுக்கப்படவேண்டும் என்றும், பெரியாரால் பயன்பெறாத குடும்பம் எதுவுமே இல்லை என்பதை சுவாசக் காற்றோடு ஒப்பிட்டும், அய்யாவின் சிந்தனை அறிவியல் அறிஞர்களுக்கே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களது மேற்கோளை சுட்டிக்காட்டியும் ஒன்றன்பின் ஒன்றாக நீரோடை போல் கருத்துகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.
நேரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆசிரி யருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தும் கால அளவைத் தாண்டி பேசிக்கொண்டே இருக்கிறார். என்ன செய்வ தென்று நாங்கள் தடுமாறினோம்.. கடைசியாக நேரத்தை சுட்டிக்காட்டி ஒரு சீட்டினைக் கொடுத்தோம். ஆசிரியர் சீட்டைப் பார்த்தார்.
தொடரும்..