புதுடெல்லி, மே.19- இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வில் காலாவதி எதுவும் இல்லை என்றும், சண்டை நிறுத்தம் நீடிக்கிறது என்றும் ராணுவம் கூறியுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத் தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட் கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.
இதைத்தொடர்ந்து இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் ஹாட்லைன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் மூலம் கடந்த 10-ஆம் தேதி மாலையில் இருந்து இருதரப்புக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு ராணுவ ஜெனரல்களும் 12-ஆம் தேதி மீண் டும் பேசினர். அப்போது இந்த சண்டை நிறுத்தத்தை தொடர்வது எனவும், இரு தரப்பும் ஒரு தோட்டாவைக் கூட சுடக்கூடாது என்றும் முடிவு செய்யப் பட்டது. மேலும் இருதரப்பும் எல்லைகள் மற்றும் முன்னணி நிலைகளில் நிறுத்திய படைகளை விலக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா– – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இந்த சண்டை நிறுத்தம் நேற்று (18.5.2025) மாலையுடன் முடிவுக்கு வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. எனவே இரு தரப்பும் மீண்டும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவற்றில் கூறப்பட்டு இருந்தன.
ஆனால் இந்த தகவல்களை ராணுவம் மறுத்து உள்ளது இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பாக எட்டப்பட்ட புரிந்துணர்வில் எந்தவித காலாவதியும் இல்லை என ராணுவம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மே 12-ந் தேதி ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்கள் இடையே நடந்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டபடி, சண்டை நிறுத்தத்துக்கு காலாவதி தேதி எதுவும் இல்லை’ என ராணுவம் தெளிவுபடுத்தி உள்ளது.மேலும் சில ஊடகங்களில் வெளியான தகவல்களைப் போல, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல்களின் பேச்சுவார்த்தை எதுவும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) திட்டமிடப்படவில்லை என்றும் ராணுவம் அந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்தது. இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்கிறது என்பதை ராணுவம் உறுதி செய்திருக்கிறது.