மும்பை, மே 19 நாடாளுமன்றம்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூறியிருந்த நிலையில், அரசமைப்புச் சட்டம்தான் உயர்ந்தது என்றும், அதற்காக நாடாளுமன்றம், நீதி மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பூஷன் கவாய் கூறியுள்ளார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் அண்மையில் நிர்ணயித்திருந்தது. இந்த உத்தரவுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் மீது குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன் வைத்தி ருந்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி காவாய் பேச்சு அமைந்தி ருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே உயர்ந்தது!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது, ‘‘நீதித் துறையா? நிர்வாகத் துறையா? நாடாளுமன்றமா? யார் உயர்ந்தவர்கள் என்கிற கேள்வி இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே உயர்ந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்திற்காக பணியாற்ற வேண்டும்.
ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றம், நிர்வா கத்துறை மற்றும் நீதித்துறை அரசமைப்புச் சட்டக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகிறது. நம் அனைவரையும்விட உயர்ந்தது, இந்த அரசமைப்புச் சட்டம்தான். இந்த மூன்று தூண்களுக்கும் அதி கார வரம்புகளையம், கட்டுப்பாடுகளையும் அரசமைப்புச் சட்டம்தான் விதிக்கிறது. மறு ஆய்வு அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தால்தான் நீதித்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்பேற்பட்ட நீதித்துறையும் மறு ஆய்வுக்கு உட்பட்டதுதான். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம்’’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைக் கொடுத்திருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் மூலம் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அதன் மீது எந்த முடி வும் எடுக்கப்படுவதில்லை. மறுபுறம் சில மாசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது. அங்கும் எந்த முடிவும் எடுக்கப்படுவதில்லை. எனவே முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதாடியிருந்தது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!
இதனையடுத்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களும் இத்தனை நாள்கள் கிடப்பில் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், அந்த மசோதாக்களை சிறப்பு சட்டத்தின் மூலம் நீதிமன்றம் நிறைவேற்றுவதாக அறிவித்தது. அதேபோல, மசோதாக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் ஆளுநரும், 3 மாத காலத்திற்குள் குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
குடியரசுத் தலைவருக்கே உத்தரவிட முடியுமா? என்று பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், “அரசமைப்புச் சட்டத்தில் உச்சபட்ச அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்கும் கடைசி அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தைத் தாண்டி இங்கு எந்த அமைப்புக்கும் அதிகாரம் கிடையாது’’ என்று கூறியிருந்தார்.
இவரது கருத்துக்குப் பதிலளிக்கும் வித மாகத்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பூஷன் கவாய் பேச்சு அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.