சென்னை, மே 18- அண்மையில் வெளியான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பொதுத்தேர்வு முடிவுகளில், குறிப்பாக சில பாடங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்த அறிக்கை பள்ளிக்கல்வித்துறைக்குச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வேதியியல் போன்ற சில பாடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில தேர்வு மய்யங்கள் மற்றும் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான 100/100 மதிப்பெண்கள் பதிவாகின. இது பல்வேறு தரப்பினரிடையே வியப்பையும், தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்ட முறை மற்றும் தேர்வு நடைபெற்ற சூழல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த முதற்கட்ட விசாரணையின் முடிவில், தேர்வு மய்யங்களில் முறைகேடுகள் அல்லது தேர்வுக்கு முந்தைய கேள்வித்தாள் கசிவு போன்றவற்றுக்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை எனத் தெரியவந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் கடினமாகப் படித்ததும், ஆசிரியர்களின் சிறப்பான பயிற்சி முறைகளும், சில பாடங்களில் கேள்விகள் எளிமையாக இருந்ததும் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண் பெறக் காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணை அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மருத்துவத் துறையின் செயல்பாடு
10 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
சென்னை, மே 18- தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவ முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன.
ஆண்களுக்கான வாய் புற்றுநோய் பரிசோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சாதனை குறித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த 10 லட்சம் புற்றுநோய் பரிசோதனை என்பது அந்த முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்,” என்று தெரிவித்தார்.
மேலும், பரிசோதனையில் புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவ மனைகளில் அதிநவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தச் சாதனை, தமிழ்நாட்டில் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான அரசின் முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தீவிரமான பரிசோதனைகள் மூலம் மாநிலத்தில் புற்றுநோய் பாதிப்பை குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாகை-இலங்கை கப்பலில் கூடுதல் பொதிக்கு அனுமதி
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
நாகப்பட்டினம், மே 18- நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையில், கூடுதல் பொதிகளை எடுத்த செல்ல ஒன்றிய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனம் சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்தை தொடங்கியது. மே 16ஆம் தேதி 100ஆவது நாள் ஆவதை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு புறப்பட்ட கப்பலில் 85 பயணிகள் பயணம் செய்தனர். இரு நாட்டு பயணிகளுக்கும் இனிப்பு வழங்கினர். இலங்கைக்கு கப்பல் புறப்படுவதற்கு முன்பு துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவன குழுமத்தினருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொடியசைத்து வைத்து சிவகங்கை கப்பலை வழி அனுப்பி வைத்தனர்.
விமான கட்டணத்தை விட கப்பல் கட்டணம் குறைவாக இருப்பதால் கப்பலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பயணிகள் 10 கிலோ வரை பொதி எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது 22 கிலோ வரை கூடுதலாக பொதிகளை எடுத்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என சுபம் கப்பல் நிறுவனத்தினர் கூறினர். பயணிகளுக்கு பாதுகாப்பு நிறைவாக உள்ள வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை இந்த பயணம் அள்ளித்தரும் என கேப்டன் ராஜாஜெகபர் கூறினார்.