திருவனந்தபுரம், மே 18- கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் கேரளத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தபின், முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என்று கூறியுள்ளது.
அந்த 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அதுதொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், சுகாதார பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் பயன்பாடு, சட்ட விதிகள், குற்றச் செயல்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக காவல்துறை, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு இதுதொடர்பான வழிமுறைகளை வழங்கியுள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி அடைந்த அரசுப் பள்ளி ப்ளஸ் 2 மாணவர்களின் மறு தேர்வுக்கு வழிகாட்டல் அனைத்து மாவட்ட
கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, மே 18- நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுத வராத சுமார் 35,350 மாணவர்களுக்கு துணைத் தேர்வு எழுத உரிய வழிகாட்டல் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் (DEO) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 8ஆம் தேதி வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில், ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை அல்லது பல்வேறு காரணங்களால் தேர்வுக்கு வரவில்லை. இம்மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஜூன் 25ஆம் தேதி தொடங்கவுள்ள துணைத் தேர்வுகளில் இவர்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றறிக்கை
இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“பிளஸ் டூ பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுத வராத அரசுப் பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குறிப்பாக சுமார் 35,350 மாணவர்கள் இந்த பிரிவில் உள்ளனர். இம்மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் உடனடியாகத் தொடர்புகொண்டு, துணைத் தேர்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். தேர்ச்சி அடையாத பாடங்களில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும், தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர்களுக்குத் தெளிவாக வழிகாட்ட வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் துணைத் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான ஊக்கத்தையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் அல்லது பயிற்சி முகாம்கள் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அளவில் செய்ய வேண்டும். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வில் பங்கேற்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, அரசுப் பள்ளி மாணவர்கள் துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்குச் செல்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் எல்லைக்குட் பட்ட பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து இந்த வழிகாட்டல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு என்ன இழப்பு?
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது. விவசாயம், வன பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகியவற்றை திட்டமிடுவதற்காக இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட EOS-09 என்ற சாட்டிலைட், தேசிய பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, எல்லைப்பகுதி ஊடுருவலை கண்காணிக்கக் கூடிய இந்த சாட்டிலைட் திட்டம் தோல்வியடைந்துள்ளது.