இரண்டு கிராம வாசிகளின் சம்பாஷணை
சாமுண்டி: ஏ,அண்ணே மதுரை வீரா! எல்லோரும் காந்தியை மகாத்மா, மகாத்மா என்று கூப்பிடுகிறார்களே, அவர்கிட்ட ஏதாவது மகிமை இருக்கிறதா?
மதுரை வீரன்: மகிமை என்றால் என்ன?
சாமுண்டி: மகிமை என்றால் தெரியாதா? சித்து விளையாட்டு. கல்லைக் கற்கண்டு செய்கிறது; சாணியைச் சந்தனம் செய்கிறது; கள்ளைப் பன்னீராக்குவது. இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள்தான்.
மதுரைவீரன்: அடேயப்பா! இதுதானா சித்து என்கிறது! இதெல் லாம் அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் செய்து விடுவார்கள். அதிலும் தமிழ் நாட்டிலிருக்கும் குட்டி மகாத்மாக்கள் இப்பொழுது கூட செய்து வருகிறார்கள். இது ஒரு அதிசயமா?
சாமுண்டி: அதிசயம் சொல்லுகிறேன் கேளு. சேலம் ஸ்ரீமான் ஆதிநாராயணஞ் செட்டியாருக்கு வடஆர்க்காடு ஜில்லாவிலே சட்டசபை மெம்பராயிருக்கிறது. இது எப்படிப்பட்ட சித்து பார்த்தாயா? அப்புறம் சென்னைக் கார்பொரே ஷனைப் பாரு. பார்த்தாயா? இன்னம் கேளு; இதுகளைவிட ஒரு பெரிய சித்து விளையாட்டு காட்டுகிறேன் பார். ஸ்ரீமான் எம்.கே.ஆச்சாரியாருக்கு இந்தியா சட்டசபை மெம்பராயிருக்கிறது.
இதைவிட இன்னம் என்ன பெரிய சித்து வேணும். இந்த சித்துக்கள் எல்லாம் அவருடைய பெயர் என்கிற மந்திரத்தைச் சொன்னதினாலேயே ஏற்பட்டது. இனி இந்த வருஷத்திற்கு அவருடைய சிஷ்யர்கள் குட்டி மகாத்மாக்கள் வேலை செய்யப் போகிறார்கள். அப்பொழுது மகாத்மாவின் மகிமையை ஒரு கை பார்க்கிறாயா?
மதுரை வீரன்: ஓட்டைக் காசு, உடைந்த சலங்கை, செல்லாக் காசு, செம்பு, பித்தளைத் துண்டு இதுகள் எல்லாம் இந்தியா சட்டசபைக்கும் சென்னை சட்டசபைக்கும் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அய்யம்மார் சொற்படி ஆடப் போகின்றதுகள். இதைவிட இன்னும் என்ன மகிமை வேண்டும்?
சாமுண்டி: அடேயப்பா! இது போதாதா? போதும் போதும். மகாத்மாவின் பெயரைச் சொன்னாலே இவ்வளவு காரியம் நடக்கிறதா! இனி அந்த மகான் தங்களுக்குச் சுவாதீனமாய் விட்டால் எவ்வளவு நடக்காது? சரி சரி, இனிமேல் பேசுவதில்லை!
– குடிஅரசு – உரையாடல் – 09.05.1926