நாடாளுமன்றத்திற்கு அதிகாரமா? உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமா?
புதுடில்லி, மே 17 குடியரசு துணைத் தலைவரின் கருத்து, குடியரசு தலைவரின் கடிதத்திற்கு மத்தியில், ‘நாடாளுமன்றத்தை விட அரசமைப்புச் சட்டமே உயர்ந்தது’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அளித்த பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்க ளுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதேபோன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்டு குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து நிலுவையில் இருந்த பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உட்சபட்ச அதி காரமான சட்டப்பிரிவு 142 அய் பயன்படுத்தி அந்த மசோதாகளுக்கும் அனுமதி வழங்குவதாகவும் தெரி வித்திருந்தது.
இதுபோன்ற சூழலில் கடந்த மாதம் 19 ஆம் தேதி மாநிலங்களைவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘‘உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை. குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. குறிப்பாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 அய் ஜனநாயக சக்திகளுக்கு எதி ரான அணு ஏவுகணையை போல் உச்சநீதிமன்றம் பயன்படுத்துகிறது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 145 ஆவது பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. அரசமைப்புச் சட்ட அதிகாரத்தை மறந்து குடியரசுத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்’’ என்று கருத்து தெரி வித்திருந்தார்.
குடியரசு துைணத் தலைவரின் இந்த பேச்சானது நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கும் பி.ஆர்.கவாய், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் குறித்த கேள்விக்கு பதில ளித்துள்ளார்.
அதில், ‘‘நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று கிடையாது. இறுதியில் அரசமைப்புச் சட்டமே உயர்ந்ததாகும். நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தி்ன் மூன்று தூண்களும், அரசமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் செயல்படாதபோது அல்லது நிர்வாகம் தனது கடமைகளைச் செய்யாதபோது மட்டுமே நீதித்துறை அதில் கண்டிப்பாகத் தலையிடும். மேலும் நீதித்துறையின் அதி கப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், கொள்கை முடிவுகள் தொடர்பான பொதுநல வழக்குகளை கையாள உச்சநீதிமன்றம் அண்மைக்கால மாக தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. அதனை நான் நிராகரிக்கிறேன்’’ என்று கூறினார்.
மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது உட்பட மொத்தம் 14 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் கொலீஜியம் அமைப்பு விரைவில் கூட உள்ளது. அப்போது இந்த விவகாரத்தை விசாரிக்க எத்தனை நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கலாம்?, அதில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெறுவார்கள்?, எப்போது விசாரணையை மேற்கொள்ளலாம்? ஆகியவை உள்பட அனைத்தும் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதை தவிர குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகளுக்கு, வழக்கின் மனுதாரர்கள் வாதங்கள் மற்றும் பதிலளிக்கும் விதமாக அது தொடர்பான விசாரணையை உருவாக்கப்படும் அரசியல் சாசன அமர்வு திறந்த நீதிமன்றத்தில் நடத்தவும் வாய்ப்புள்ளதாக, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.