ஆளுநர் வழக்குத் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் ஒன்றிய அரசு! இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

viduthalai
2 Min Read

புதுடில்லி, மே 15 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 143 (1) மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழியாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்த விளக்கத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்று (15.5.2025) முற்பகல் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

‘‘தமிழ்நாடு ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னு தாரணங்களில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்த அரசமைப்புச் சட்ட நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் – குடியரசுத் தலைவரின் குறிப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மக்கள் ஆணையின் மதிப்பைக் குறைக்கும் வகை யில் பாஜகவின் கட்டளைப்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது என்றும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் அவற்றைப் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்துவத்திற்கும் அரசமைப்புச் சட்டத்தின் இறுதி விளக்கவுரையாளரான உச்சநீதி மன்றத்தின் அதிகாரத்திற்கும் நேரடியாக சவால் விடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

* ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் எந்த ஆட்சேபனையும் இருக்க வேண்டும்?

* மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளு நர்கள் ஏற்படுத்தும் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கி றதா?

* பாஜக அல்லாத மாநிலச் சட்டமன்றங்களை முடக்க ஒன்றிய அரசு விரும்புகிறதா? என்று கேள்விகளை எழுப்பியுள்ள அவர், ‘‘நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு பகிரங்கமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இந்த மோசமான சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநிலங்களையும், கட்சித் தலைவர்களையும்  கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போரில் நாம், நமது முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *