பிளஸ் 2 தேர்வில் 95.6 சதவீத
மதிப்பெண் எடுத்து சாதனை!
மதிப்பெண் எடுத்து சாதனை!
சண்டிகர், மே 15 சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6 சதவீதம் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பார்வையிழந்த மாணவி
இளம் வயதிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீசியதில், கண் பார்வையை முற்றிலும் இழந்த நிலையில், மனம் தளராமல் படித்து வெற்றி பெற்றுள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 13.5.2025 அன்று வெளியாகின.
இதில் சண்டிகரைச் சேர்ந்த கஃபி என்ற பார்வை திறன் இழந்த மாணவி, 95.6 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இவரின் தந்தை பவன், அரியானா மாநில தலைமைச் செயலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் தாயான சுமன், இல்லத்தரசியாக உள்ளார். இருவருமே 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால், தங்கள் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளனர்.
95 சதவீத மதிப்பெண்
ஆனால், எதிர்பாராத விதமாக குடும்ப பிரச்சினையில் அண்டை வீட்டார் ஒருவர் அமிலத்தை வீசியதில் கஃபியின் பார்வை முற்றிலும் பறிபோனது. பல ஆண்டு தொடர் சிகிச்சைக்குப் பிறகு பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் கஃபி சேர்க்கப்பட்டார். கண்களை இழந்து இருள் சூழ்ந்தாலும் கல்வியின் மூலம் வெளிச்சத்தைத் தேட முயன்ற கஃபி, 10ஆம் வகுப்பில் 95.2 சதவீத மதிப்பெண் பெற்று பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது பிளஸ் 2 தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மாணவி கஃபி கூறியதாவது,
”ஆரம்பத்தில் படிக்க சிரமமாக இருந்தது. ஆனால், தொடர்ந்து செய்து வந்ததால், எளிமையாகிவிட்டது. அய்ஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே என் கனவு. நான் நாள்தோறும் 2 – 3 மணிநேரம் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
எங்கள் சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது. எனக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்காக என் பெற்றோர் போராடி வருகின்றனர். நான் கடுமையாகப் படிப்பேன். பிறகு, ஒருநாள் எனக்கான சட்டப் போராட்டத்தில் நானே ஈடுபட்டு நீதியைப் பெறுவேன்” எனக் குறிப்பிட்டார்.
பட்டாவில்
பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்
நில நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல்
சென்னை, மே 15 இறந்தவர்களின் பெயர் நீக்கவும், புதிய உரிமையாளர் பெயர்களை பட்டாவில் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம். eservices.tn.gov.in என்ற இணையதளம் அல்லது இ-சேவை மய்யங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.