தோழர்களே, கடந்த சனி, ஞாயிறுகளில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன.
ஏராளமான இருபால் இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு புத்துணர்ச்சி பெற்றனர். இக்கால கட்டத்திற்குத் தேவையான தீர்மானங்களும், வேலைத் திட்டங்களும் வெளியிடப்பட்டன.
இவற்றோடு நம் வேலை நிறைவு பெற்று விட்டதா? நாம் நிறைவேற்றிய தீர்மானங்களையும், வேலைத் திட்டங்களையும் செயலுருவாக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியமல்லவா!
நமது கழகம் கட்சியல்ல – ஓர் இயக்கம்! இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் – மூச்சுக் காற்றுக்கு ஓய்வுண்டா?
நாட்டில் உள்ள பத்திரிகை ஊடகங்களும் தொலைக்காட்சிகளும், ஒளிதளங்களும் (யூட்யூப்) பெரும்பாலும் என்ன செய்துகொண்டு இருக்கின்றன?
மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்குச் சிந்தனைக்கோ ஊக்கம் ஊட்டுபவைகளாக உள்ளனவா?
‘நாய் விற்றக் காசு குரைக்காது’ என்ற நிலையில் தான் அவை செயல்படுகின்றன. ஜோதிடம் என்பது அறிவியலுக்கு பொருந்தாது, வாஸ்து என்பது விவரம் கெட்ட ஒன்று. கோயிலுக்குச் சென்றால் காலமும், பணமும் விரயம் என்று தெரிந்திருந்தும் அவற்றை மக்கள் மத்தியில் திணித்துக் கொண்டே இருந்தால்தான் ஆண்டாண்டுக் காலமாக சுக போகமாக இருந்து வரும் தங்களின் வாழ்க்கைக்குக் குந்தகம் விளையாது என்று விதைக்காது விளையும் கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் கல்வி என்பது தங்களின் ஏக போகத்தில் இருந்து வந்த நிலையில் சமூகநீதி, இடஒதுக்கீடு என்ற ஏற்பட்டால் தங்களின் ஏகபோகம் வீழ்ச்சி அடையும் என்பதால் சூழ்ச்சிகரமாக கொல்லைப்புறமாகப் புகுந்து அவற்றின் வேரை வெட்டும் நயவஞ்சக வேலையில் ஈடுபட்டு வருகின்றன – ஆதிக்கப் புரியினர்!
தேசியக் கல்வி என்பதும், விஸ்வ கர்மா யோஜனா என்பதும், நீட், ஜே.இ.இ. சிட்டா, கிளாட், நிஃப்ட், ஏ.அய்.எல்.இ.டி. எல்கட் கியூட், டான்செட் அய்.சி.ஏ.ஆர். நாடா என்றும் ஒரு நீண்ட பட்டியலே, அடித்தட்டு மக்களும், முதல் தலைமுறையாக படிக்க முயலுவோரும் ‘உள்ளே நுழையாதீர்!’ (No Admission) என்பதற்கான ஏற்பாடுகளேயாகும்.
பாசிச பார்ப்பனீயம் மூளையைக் கசக்கிக் கசக்கிக் கண்டுபிடித்த உபாயங்கள் இவை.
இந்த முட்டுக்கட்டை அடுக்குகளில் இருந்தெல்லாம் திமிறி எழுந்து நம் மக்களை நடமாடச் செய்ய வைக்க வேண்டிய மகத்தான பொறுப்பும், கடமையும் சமூகநீதியில் அக்கறை உள்ளவர்களின் நீங்காக் கடமையாகும்.
‘மக்களிடம்’ செல்! என்பது ஓர் உயர்ந்த கோட்பாடு. தந்தை பெரியார் தம் வாழ்நாள் எல்லாம் 94 வயதையும் தாண்டி, சதா தொல்லை தரும் உடல் உபாதைகளையும் சுமந்து கொண்டே மக்களிடம் சென்று கொண்டே இருந்தார்கள். அறிவுப் பிரச்சார அடை மழையைப் பொழிந்து கொண்டே இருந்தார்கள்.
அதன் காரணத்தால்தான் நம் மக்கள் வாய்ப்புகளை அனுபவிக்க ஆரம்பித்தார்கள் – கல்வியில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் கீழே விழும்போது எல்லாம் தந்தை பெரியார் தோள் கொடுத்து, தூக்கித் தூக்கி விட்டார்கள்; அதற்கென ஓரியக்கம் கண்டு சதா அந்தப் பணியைச் செய்யுமாறும் ஏற்பாடு செய்து வைத்து விட்டுத்தான் தன் இறுதி சுவாசத்தைத் துறந்தார்.
அந்த வகையில்தான் நமது இயக்கம், திராவிடர் கழகம் கண்களைச் சிமிட்டாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
‘சமூக நீதி!’ என்ற ஒன்றின் முக்கியத்துவத்தைப் பெருந் திரள் மக்கள் மத்தியில் உணரும் நிலையை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறோம்.
எந்தக் காங்கிரஸ் தந்தை பெரியாரின் வகுப்புரிமை என்ற சமூகநீதியைப் புறந்தள்ளியதோ; அதே காங்கிரஸ் தன் கொள்கையாகக் கொள்ள ஆரம்பித்து விட்டது!
தந்தை பெரியார் உழுததும், விதைத்ததும், உரமிட்டதும், நீர் பாய்ச்சியதும், களை எடுத்ததும், வேலிஅமைத்ததும் வெற்றி விளைச்சலானதை பொறுக்க மாட்டாத குள்ள நரிக் கூட்டம், மக்கள் மத்தியில் குடி கொண்டிருக்கும் மவுடிகத்தனத்தைப் பயன்படுத்தி, கோயில், குளம், பக்தி என்று காட்டித் திசை திருப்பி அந்தத் திரை மறைவில் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சி வேரில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டு இருக்கிறது – அதிகார அரசியலைக் கைப்பற்றி!
புராணங்களைப் புராணங்கள் என்று சொல்லக் கூடாதாம்! அவை வரலாறாம்! அந்தப் புராணப் புனைவுகளின் கதா நாயகர்கள் கடவுள்களாம்! கடவுள் அவதாரங்களாம்!!
செயற்கை நுண்ணறிவைப் (AI) பற்றி ஒரு பக்கத்தில் உலகம் பேசிக் கொண்டு இருக்கிறது. இங்கே ராமன் நாமம் ஜெபிக்க சொல்லுகிறார்கள்!
ஏதோ சாதாரணமாக சொல்லுகிறார்கள் என்று நம்பி ஏமாந்து விடக் கூடாது; நமது முன்னேற்றப் பாதையின் பயணத்திலிருந்து நம்மைத் தடுத்துப் பழைமைப் படுகுழியில் தள்ளும் நயவஞ்சக வித்தைகள் இவை!
இதை மக்களிடம் யார் சொல்லுவது? பாசிசம் விரிக்கும் படுகுழியில் வீழாமல் தடுத்தாட் கொள்ளும் கடமை யாரிடம் இருக்கிறது?
ஆம் தோழர்களே! அது நம்மிடம்தான் இருக்கிறது.
பவிசுகள் – பதவிகள், படாடோபங்கள் என்ற சுகபோகங் களின் கண் சிமிட்டல்களுக்கு ஆளாகாமல் அறிவு ஆசான் தந்தை பெரியார் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு வகுத்துத் தந்த பாதையை நோக்கி உரிமை மறுக்கப்பட்ட மக்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பெரும் பணிச் சுமை நம் தோளில்தான் இருக்கிறது தோழர்களே!
அதனால்தான் ஆண்டு 92லும் அயராத சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார், மக்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறார் – விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்.
சென்னைக் கலந்துரையாடல்கள் திருப்புமுனையா கட்டும்! மக்களிடம் செல்லுவோம்! செல்லுவோம்!!
பெரியார் பாதையின் அவசியத்தைச் சொல்லுவோம்! சொல்லுவோம்!!
வெற்றி நமதே!
வீறு கொண்டு எழுவீர் தோழர்களே!