‘அண்ணா என்னை விட்ருங்கண்ணா… அண்ணா அடிக்காதீங்க, டேய் உன்ன நம்பித்தானேடா வந்தேன். இப்படி ஏமாத்திட்டியே டா…’ இப்படி ஒரு இளம்பெண் கதறி அழும் காட்சிப்பதிவு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இளம் பெண் அழும் குரல் சத்தமும், அலறல் சத்தமும் அப்போது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த காட்சி ஒலிப்பதிவு தான் பொள்ளாச்சி சம்பவத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தது.
– – – – –
நீதிபதி நந்தினி தேவி
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கினை தொடக்க முதல் முடிவு வரை விசாரித்த ஒரே நீதிபதி நந்தினி தேவி ஆவார் இவ் வழக்கில் மூன்று முறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது மொத்த குற்ற பத்திரிகையின் பக்கங்கள் 390 விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் எண்ணிக்கை 48 எதிர்த்தரப்பு சாட்சியங்கள் இரண்டு ஆவணங்கள் 12 கார்கள் உட்பட குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் 30 அரசு ஆவணங்கள் 206 நீதிமன்ற ஆவணங்கள் 12.
– – – – –
பிறழ் சாட்சி இல்லாத வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பலர் புகார் செய்ய முன்வரவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே துணிச்சலுடன் புகார் செய்தனர்.
இந்த வழக்கில் 8 பெண்கள் உள்பட 48 பேர் சாட்சியம் அளித்தனர். பின்னர் அந்த சாட்சியத்தை மறுத்து யாரும் சாட்சியம் அளிக்கவில்லை. ஆகவே பிறழ் சாட்சி இல்லாத வழக்காக இது அமைந்தது என்றும், பிறழ் சாட்சி இல்லாத ஒரே வழக்கு இது என்றும் சி.பி.அய். வழக்குரைஞர் சுரேந்திரமோகன் தெரிவித்தார்.