‘எனக்கு இளமை திரும்பியது! முதுமை விடை பெற்றது!’ என்று கழகத்தின் தலைவர் அகம் – முகம் மலரும் அளவுக்கு சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று மாணவர் பட்டாளமும், இளைஞர் சேனையும் அணி வகுத்தன! மகளிரும் கிளர்ந்து வந்தனர்!
ஆமாம், புத்தம் புதிய முகங்களைக் காண முடிந்தது! ஒரு காலத்தில் சொல்லு வார்கள்.
ஊருக்கு நாலு நரைத்த தலைகள் இருக்கும் – அவர்கள்தான் திராவிடர் கழகத்தினர் என்று ஏகடியம் பேசியோர் உண்டு.
ஆனால் அந்த நரைத்த நாலு தலைகளும் ஆளுமை மிக்கவைதான்.
கொள்கையின் சொக்கத் தங்கங்களாக ஜொலிக்கும்! அய்யா ஆணையிட்டால் அக்கணமே புறப்படும் அரும் பெரும் தொண்டர்கள் அவர்கள்.
ஜாதியை ஒழிக்க, ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவை எதிர்த்தால் மூன்றாண்டு தண்டனை என்று புது சட்டம் கொண்டு வந்தாலும், புலியெனப் புறப்படும் கொள்கைக் கோமான்கள் அவர்கள்! கட்டுப்பாட்டின் கவசமெனக் கருதத் தக்கவர்கள்.
தம் தொண்டர்களைப் பற்றி தந்தை பெரியார் மன்னார்குடியில் நடை பெற்ற தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மத்தியில் தெரி வித்த கருத்து இப்பொழுது நினைத்தாலும் புல்லரிக்கச் செய்யும்.
‘‘நாம் எதிர்பார்த்த இலட்சியத்தில் எதிலும் தோற்றுவிடவும் இல்லை; பெரிதும் வெற்றி பெற்றும்… பெற்றுக் கொண்டும் மற்றவர்களும் ஏற்கும்படிதான் வளர்ந்து வருகின்றோம். இந்த நிலை மாறாமல் இருக்க வேண்டும். இப்படியே இருந்து வரும் நிலையிலேயே நான் சாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நமது தோழர்களும் நாணயமாய், கட்டுப்பாடாகவுமே இருக்கிறார்கள்.
நமது கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட பரவாயில்லை. ஆனால் நாணயத்தில் ஒழுக்கத்தில் தவறு இருக்கக் கூடாது. அதுதான் ஒரு கழகத்திற்கு முக்கியமான பலம்!’’ என்றார் தந்தை பெரியார். (‘விடுதலை’ 11.10.1964 பக்கம் 3)
மற்ற கட்சிகளுக்கும், நமது இயக்கத் திற்கும் இடையே உள்ள இந்த வித் தியாசமான வலுவான இழையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் இருந்தார் – அது இயக்கத்திற்கு மட்டுமல்ல – நம் இனத்திற்கே மாபெரும் பாதுகாப்பு அரணாகும்.
இந்தியாவில் தோன்றிய பல சீர்திருத்த இயக்கங்கள், அவற்றைத் தோற்றுவித்த தலைவர்களின் மறைவிற்குப் பின்னர் மறைந்தே போயின!
ஆனால் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் – இந்தத் திராவிடர் கழகம் முன்னிலும் பலமாக வேரூன்றி விழுதுகளைப் பரப்பி விண்ணை முட்டி நிற்கிறது.
அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் தொலைநோக்கு – அதற்கான கட்டமைப்பு ஏற்பாடு – இயக்கத்தை எழுச்சியுடன் நடத்திச் செல்பவரை இனங் கண்டு அடை யாளப்படுத்திய பாங்கு – இன்னோரன்ன காரணங்கள்தான் உலகப் புகழ் புரட்சி இயக்கமாக திராவிடர் கழகம் தன்னிகரில்லாத இலட்சிய இயக்கமாக தலை நிமிர்ந்து வீ(ஏ)று நடைபோடுகிறது.
நான்காண்டுகள் மட்டுமே தந்தை பெரியாருக்குப் பின் தலைமையேற்று கழகத்தை நடத்திச் சென்றார் அன்னை மணியம்மையார்.
நான்கு ஆண்டுகளும் நவரத்தினங் களாக ஜொலிக்கவே செய்தன!
நெருக்கடி நிலை என்னும் நெருப்பின் பாய்ச்சலை எதிர் கொண்டார்.
‘இராவண லீலா’ என்ற இன எழுச்சிப் போராட்டக் காவியத்தை நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தையே புரட்டிப் போட்டார்!
அய்யாவின் உடல் நலனைப் பேணிய அம்மா அவர்கள் தன் உடல் நலம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. 60 ஆண்டுகளைத் தொடு முன்னே இறுதி மூச்சைத் துறந்தார்.
அத்துடன் முடிந்து போய் விட வில்லை; பத்து வயதில் மேடை ஏறி, 29ஆம் வயதிலே விடுதலை ஆசிரியராகி, பொதுச் செயலாளராகவும், தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காணப்பட்டு, அந்த அரும்பெரும் பொறுப் புகளில் அமர்த்தப்பட்டார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி.
2003 முதல் கழகத்தின் தலைவராகவும் ஒட்டு மொத்த தோழர்களின் ஒரே எண் ணத்தோடு அந்தப் பெரும் பொறுப்ைப ஏற்றார்.
இடஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் பெயர் எப்படி வரலாற்றில் பதிந்ததோ, அதே போல 69 விழுக்காட்டைத் தக்க வைத்துக் கொள்ள 76ஆவது சட்டத் திருத்தம் என்று வருகையில் தலைவர் வீரமணியை வரலாறு தன் மடியில் வைத்துச் சீராட்டும் – பாராட்டும்!
‘பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் இருக்குமா’ என்ற கேள்விக்கு விடைதான் ‘இதோ நம் முன் திரண்டு நின்று தோள் தட்டும் இந்த இருபால் இளைஞர் சேனையே பதில்!’ என்று கழகத் தலைவர் சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. இடியும், மின்னலுமாக உணர்ச்சிப் பெருக்கின் பிழம்பாக மிளிர்ந்தது!
எதை எதிர்பார்த்து இந்த இளைஞர் பட்டாளம் திரண்டது? பதவி கிடைக்கும் என்றா? பவிசு கிடைக்கும் என்றா?
போராட்டத்துக்கு அழைப்பு வரும், பேரணிகளுக்கு அழைப்பு வரும், சிறை செல்லத் தயாராக இருங்கள் என்று அறிக்கைவரும்.
எல்லாம் தெரிந்துதான் புதுப்புது முகங்கள் முகிலைக் கிழித்து வரும் கதிரொளியாக, எங்கு சென்றாலும் கருப்புடை அணிந்து கர்ச்சனை முழக்கம் செய்கிறார்கள்.
1958இல் இதைச் சொன்னார் புரட்சிக் கவிஞர். இப்பொழுது இருந்துவரும் இந்த எண்ணிக்கையையும், எழுச்சியையும் பார்த்தால் – சிங்கக் கூட்டத்தைக் கண்ணுற் றால்…. அவர் பதிலில் துடிப்புப் புயல் பல மடங்கு வேகமாக வீசியிருக்கும்.
இழப்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை என்று தெரிந்தும், இன எழுச்சிப் போர்ப்பாட்டுப் பாடி வருகிறார்கள்! – இது கண்டுதான் 93ஆம் வயதைத் தொடவிருக்கும் நமது தலைவர் ஆசிரியர் ‘இளமை பெறுகிறேன்’ என்று உரத்த முறையில் முரசறைகிறார்.
சென்னையில் திரண்டு வந்து அரிமா உணர்வோடு திரும்பும் இருபால் மாணவ – இளைஞர் சேனையினரே!
எத்தகைய தீர்மானங்களை பெரியார் திடல் கலந்துரையாடலில் ஒருமுகமாக வடித்தோமோ அதில் கால் புள்ளிக்கூடக் குறையாமல், அவை செயல் பணிகளாகப் பூத்துக் குலுங்கட்டும், புயல் வீச்சாக செயல்படுவீர்!
கத்தியின்றி, ரத்தமின்றி நமது கொள்கைப் போர் முரசம் எங்கெங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நம் நாட்டு மக்களைப் பார்த்து வினா ஒன்றை எழுப்பினாரே, அது தெரியுமா?
‘‘உனக்குமா ஓர் இயக்கம்?
அதைக் கலைக்க என்ன தயக்கம்?
இனக் குறையை நீக்கப் பெரியார் இயக்கம் இருக்கையில்,
உனக்குமா ஓர் இயக்கம்? (‘குயில்’ 3.3.1959).
என்று கேட்டாரே – அந்த வினா நம் இனத்தின் ஒவ்வொரு இளைஞனையும் பார்த்துக் கேட்கும் கேள்வியாகட்டும் – அந்தக் கேள்விக்குப் பதிலும் கிடைக் கட்டும் வெற்றி நமதே!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!!