போர் நிறுத்தம் அறிவிப்பு எல்லை மாநிலங்களில் அமைதி திரும்பியது

2 Min Read

புதுடில்லி, மே 12- இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாள்களுக்கு பிறகு, நேற்று (11.5.2025) அமைதி திரும்பியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7ஆம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது.

பீரங்கி தாக்குதல்

எல்லை பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். மின்விளக்குகள் எரியும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால்,மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதலால் அபாய ஒலியும் அடிக்கடி எழுப்பப்பட்டது. தாக்குதல் அபாயம் மிகுந்த இடங்களில் உள்ள மக்கள், பதுங்கு குழிகளுக்கு சென்று தங்கினர். இதனால் எல்லை மாநிலங்களில் வசித்த மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். தொடர்ந்து 4 நாள்களாக தூக்கம் இன்றி தவித்தனர்.

அமைதி திரும்பியது

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் (10.5.2025) மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், இரவு வரை எல்லைபகுதிகளில் குண்டு சத்தம் கேட்டபடி இருந்தது. ஆனால், நள்ளிரவுக்கு பிறகு, எல்லை மாநிலங்களில் அமைதி நிலவியது. காஷ்மீரில் உள்ள எல்லை கிராமங்களில் பதுங்கு குழிகளில் வசித்த மக்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். பஞ்சாப்பில் நேற்று முன்தினம் இரவு அமைதி திரும்பியது. அமிர்தசரஸ் நகரில் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நேற்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

போர் முடிந்தும் கேட்ட குண்டு சத்தம்

பதான்கோட், அமிர்தசரஸில் நேற்றும் குண்டு சத்தம் கேட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். வெடிக்காத குண்டுகளை ராணுவ வீரர்கள் அழித்ததால் சத்தம்ஏற்பட்டதாக பின்னர் தகவல் வெளியானது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மின் விநியோகம் சீரானது: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் மின் விநியோகமும் நேற்று சீரானது.ராஜஸ்தானில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் அபாய ஒலி எழுப்புவது நிறுத்தப்பட்டது. ஜெய்சல்மார் மாவட்டத்தில் மக்கள் நேற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனாலும், ட்ரோன் தாக்குதல் நடக்கக்கூடும் என்று கருதி காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் விழிப்புடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *