நேற்று (11-05-2025) பெரியார் திடலில் காலை முதலே கருஞ்சிறுத்தைகள் கூட்டமாக காட்சி அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் சரியாக 10.45 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தொடங்கியது.
அன்னை நாகம்மையாருக்கு
வீரவணக்கம்
வீரவணக்கம்
பெரியார் திடலுக்கு வருகை தந்த தகைசால் தமிழர் இனமானத் தலைவர் தமிழர் தலைவருக்கு கருஞ்சிறுத்தைப் பட்டாளத்தினர் விண்ணைப் பிளக்கும் முழக்கத்துடன் இருபுறமும் வரிசையாக அணிவகுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அன்னை நாகம்மையாரின் மறைவு நாளையொட்டி (11.5.1933) அவரது படத்திற்கு கழகத் தலைவர் தலைமை யில் மலர்தூவி தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
கூட்டத்தின் தொடக்கமாக திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத்தின் நோக்கத்தினையும், கழகத்தின் உயிர்ப்புடன் திகழ்ந்து வரும் இளைஞரணி, மாணவர் கழகம் இரண்டு அணிகளின் செயல்பாடுகள் அனைத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், நாளும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றும், களப்பணி, சமுதாயப் பணிகள், இணையதளத்தில் இயக்கக் கொள்கைகளை இன்னும் அதிகமாகப் பரப்பி வேகமாக செயல்படுவோம் என்றும் எடுத்துரைத்து உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழகத்தின் மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். காலத்திற்குத் தேவையான முக்கியமான 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 11-05-2025 பகல் 12 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. பெரியார் திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கிய திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் மாநில கூட்டத்தினை தொடங்கி வைத்து மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார். கடந்த கால மகளிரணி செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்களையும் எடுத்துக் கூறினார். 9 தீர்மானங்கள் மகளிரணி – மகளிர் பாசறைத் தோழர்களின் பலத்த கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிரணித் தோழர்கள் வி.கே.ஆர்.பெரியார்செல்வி, மணிமேகலை சுப்பையா, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் உரையாற்றினர்.
சுயமரியாதைத் திருமண நிலையத்தின் செயல்பாடு களைப் பாராட்டி அதன் இயக்குநர் பசும்பொன்னுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உணர்ச்சிபூர்வமான எழுச்சியுரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.