சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, அவற்றில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் காலத்தின் கல்வெட்டாகும் – எதிர்கால எழுச்சிக்கான காரணிகளாகும்.
அந்தத் தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன. அந்தச் சட்டங்்கள் நம் மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை, புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்குபவைகளாக இருந்து வந்திருக்கின்றன.
ஏதோ கூடினோம் – சம்பிரதாயத்துக்காக தீர்மானங்களை நிறைவேற்றினோம் என்று கூறும் மலினமானவையல்ல.
1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் தந்தை பெரியார் நடத்திய முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சுயமரியாதை மாநாடு்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று அளவும் பெருமையாகப் பேசப்படுபவை. ஆய்வு நோக்கில் உலகெங்கும் அலசி ஆராயப்படுகின்றன.
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, பாலியல் நீதி, சமதர்மம், சமத்துவம், சுயமரியாதை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அதிலும் குறிப்பாக பண்பாட்டுப் படையெடுப்புகளை முறியடிப்பதிலும், இன எழுச்சியை ஏற்படுத்துவதிலும் அவை பெரும் பங்கு வகித்துள்ளன.
‘‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்!’’ என்றார் பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியார் (‘குடிஅரசு 11.11.1944)
தந்தை பெரியாரின் சிந்தனைகளும், நடவடிக்கைகளும் இதனைக் கருப்பொருளாகக் கொண்டதாகவே இருக்கும்.
எதிர்ப்பவைகளாக இருந்தாலும் சரி, ஆதரிக்கப்படு பவைகளாக இருந்தாலும் சரி – அதற்கு அடிப்படை இதுதான்.
அரசியல், சமூக, பொருளாதாரம் எதுவாக இருந்தாலும், இவையே தந்தை பெரியாரின் அசைக்கவே முடியாத அணுகுமுறைகளாகும்.
சென்னையில் கடந்த சனி, ஞாயிறுகளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் முறையே நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு (10.5.2025), திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டங்களிலும் சரி (11.5.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒவ்வொன்றும் இக்கால கட்டத்திற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த வழி காட்டுபவைகளே!
கழகத் தலைமைச் செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி தந்தை பெரியாரின் உரைகளும், எழுத்துகளும், போராட்டங்களும் கணக்கில் அடங்கா.
நூற்றுக்கு நூறு வெற்றி பெற்ற விட்டதா என்று கேள்வி கேட்பதில் சிறிதளவும் பொருள் இல்லை.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரியத்தால், அது உருவாக்கிய மதத்தால், அதன் ஸ்ருதி, ஸ்மிருதிகளால், இதிகாசப் புராணங்களால் புரையோடிப்போன பக்திப் போதைக்கு அடிமையான ஒரு சமூகத்தில், ஒரு நூற்றாண்டில் மகத்தான மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.
முதலில் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும், பெயருக்குப் பின் ஜாதிவாலை ஆட்டிக் கொண்டிருந்த சமுதாயம் இது. இப்பொழுது அந்த ஜாதி அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள வெட்கப்படும் ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளதை யாரே மறுக்க முடியும்? இதற்குக் காரணம் யார்? இயக்கம் எது? என்ற கேள்விக்கான விடை இளம் குழந்தைகளுக்கேகூடத் தெரிந்த உண்மையாகும்.
இப்பொழுது, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் ஜாதிய சீண்டல்கள், வன்முறைகள், ஆணவக் கொலைகள் நிகழ்வதை மறுக்க முடியாது. அறவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலை.
ஒரு சுதந்திர நாட்டில் ஏதோ ஒரு வகையில் ஜாதியின் செதில் தென்பட்டாலும், அது உண்மையான சுதந்திர நாடாக இருக்க முடியாது.
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கப் பெறவில்லை.
தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்கூட, நமது தலைவர் ஆசிரியர் முன்மொழிந்த தீர்மானம் என்ன தெரியுமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது (Untouchability) என்று அதன் 17ஆவது பிரிவு கூறுகிறது. அந்த சொல்லுக்குப் பதிலாக ஜாதி (Caste) ஒழிக்கப்படுகிறது என்ற சொல் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம். காரணம் தீண்டாமையின் மூல வேர் என்பது ஜாதி தானே! மூலத்தை ஒழிக்காமல் நிழலோடு சண்டை போட்டு என்ன பயன்?
மூல பலத்தை நோக்கிப் போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர் முறை என்றார் அறிஞர் அண்ணா.
அதைத்தான் தந்தை பெரியார் செய்தார் – அதில் பெரும் வெற்றிக் கிடைத்துள்ளது என்றாலும் மிச்ச சொச்சங்களை வேரறுக்க அரசு சில முறைகளைக் கையாள வேண்டும்.
காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை உருவாக்கி, ஜாதிப் பிரச்சினை தோன்றும் அறிகுறி காணும் அந்த நிலையிலேயே முளையிலேயே கண்டறிந்து தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை இப்பொழுது மட்டுமல்ல; பல பத்தாண்டுகளுக்கு முன்பே திராவிடர் கழகம் தீர்மானத்தை நிறைவேற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
இப்பொழுது நடைபெற்றுள்ள கழகச் செயற்குழுவிலும் தீர்மானமாக வலியுறுத்தியுள்ளோம்! அரசு செயல்படுமாக!