சென்னை, மே 11– தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், சுயமரியாதை உலகைப் படைக்க அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுவது என்றும், கழகப் படிப்பகங்களை சிறப்பாக செயல்பட வைப்பது உள்பட திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை பெரியார் திடலில் நடபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணிக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
11.05.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்மொழியப்படும் தீர்மானங்கள்:
முன்மொழிந்தவர்: தா.தம்பி பிரபாகரன்
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 1:
கழகத் தலைவரின் ஆணைகள் ஏற்று
களப் பணியாற்ற உறுதியேற்போம்!
களப் பணியாற்ற உறுதியேற்போம்!
ஓர் இனத்திற்கே சுயமரியாதையை மீட்டுத் தந்த சூரியனாம் தந்தை பெரியார் அவர்கள்தான், ‘இனமானம் காக்கும் பணியில் தன்மானத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாது’ என்னும் பாலபாடத்தை இவ் வியக்கத்திற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். “பிச்சை புகினும் பிரச்சாரம் நன்றே” என்று தமிழர் தலைவர் நடத்திய பாடத்தையும் பிழையறப் பயின்றதால் தான் திராவிட இனத்தின் வாளும் கேடயமுமாக திராவிடர் கழகம் செயல்பட முடிகிறது. போர்க் களத்தில் நிற்கும் போது, படைத் தளபதியின் கட்டளை எதுவென்றாலும், அதை இம்மியளவும் பிசகாமல் செயல்படுத்த வேண்டும் என்னும் இராணுவக் கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவரால் வளர்க்கப்பட்டது திராவிடர் கழக இளைஞரணி. அதனை இத் தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் அப்படியே பின்பற்றுவது இயக்கத்தின் செயல்பாட்டுக்கும், இனத்தின் நலனுக்கும் மிக முக்கியமானதாகும். சுயமரியாதை மிகு பெரியார் உலகம் படைக்க, கழகத் தலைவர் வழங்கும் ஆணைகள் எதுவாயினும் அதே கட்டுப்பாட்டு உணர்வுடன் களப் பணியாற்ற திராவிடர் கழக இளைஞரணி எப்போதும் அணியமாக இருக்கிறோம் என்று இக் கூட்டம் மீண்டும் ஒரு முறை உறுதியேற்கிறது.
முன்மொழிந்தவர்: முனைவர் வே.இராஜவேல்
தீர்மானம் எண் 2:
‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன்? எதற்காக?’
பெரியார் மண்ணுக்கும், மக்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சுட்டிக் காட்டிய ‘ஜாதி வாரிக் கணக்கெடுப்பு’ என்பது சமூக நீதியை அனைவருக்கும் உறுதி செய்வதற்கு அவசியமான ஒன்றாகும். திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட சமூகநீதியில் அக்கறை கொண்ட அமைப்புகளின் தொடர் முயற்சியால், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றாலும், அதைச் செயலாக்கச் செய்ய இன்னும் தொடர் முயற்சியை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும் என்பது தான் உண்மை நிலையாகும். இதற்கு மக்களைத் தயார்ப்படுத்துவதும் அவசியமாகும். அப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் விதமாக, ‘ஜாதி வாரிக் கணக்கெடுப்பு ஏன்? எதற்காக?’ என்னும் தமிழர் தலைவரின் புத்தகத்தைப் பல்லாயிரக்கணக்கில் ஊர்தோறும் கொண்டு சேர்ப்பது என்று திராவிடர் கழக இளைஞரணி முடிவெடுக்கிறது.
முன்மொழிந்தவர்: சு.அறிவன்
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 3:
மோட்டார் சைக்கிள் பேரணி
சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றிய அளவில் மோட்டார் சைக்கிள் பேரணியை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடத்தி, பேரணி முடியும் இடத்தில் பொதுக் கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிந்தவர்: பா.வெற்றிவேல்
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 4:
விழிப்புணர்வுக் கண்காட்சி
சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும், அது உண்டாக்கிய சமூகப் புரட்சியையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் முக்கியமான ஊர்களில் கண்காட்சியை நடத்தி, விழிப்புணர்வூட்டுவது என்று இக் கூட்டம் முடிவு செய்கிறது.
முன்மொழிந்தவர்: மா.செல்லதுரை
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 5:
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டும்
பெற்றோருக்குப் பரிசு வழங்குக!
பெற்றோருக்குப் பரிசு வழங்குக!
பண்பாட்டுப் படையெடுப்பின் காரணமாக திருமுதுகுன்றம் என்ற தமிழ்ப் பெயர் விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரானது. இதை மாற்றக் கோரி தொடர்ந்து அவ்வூரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்திவருகின்றன. இக் கோரிக்கையைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினரும் வலியுறுத்திப் பேசியுள்ளார். விருத் தாசலம் மட்டுமின்றி, வடமொழிப் பெயர்களால் மறைக்கப்பட்டுள்ள தமிழ் ஊர்ப் பெயர்களை மீட் டெடுத்துச் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும், குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், தனி இணையதளத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசை இக் கூட்டம் பாராட் டுவதுடன், தமிழ்ப் பெயரைச் சூட்டும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஊக்கப் பரிசு வழங்கிட வேண்டுமென்றும் இக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: எ.சிற்றரசு
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 6:
கழக இளைஞர்கள் பொறுப்பில் படிப்பகங்கள்
திராவிட இயக்கங்களை வளர்த்தவை பெரிதும் படிப்பகங்களே! தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களி லும் திராவிடர் கழகத் தோழர்களின் அரிய உழைப் பாலும், கொடையுள்ளத்தாலும் ஏராளமான படிப் பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆக்கப் பூர்வமாகவும், அறிவியல் வளர்ச்சிக்கேற்பவும் மாற்றியமைத்து, இளைஞர்களுக்குப் பயன்படும் வகையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது அவசியமாகும். இதனைத் திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பேற்றுச் செயல்பட தமிழர் தலைவர் அவர்களின் அனுமதியை வேண்டுவதுடன், தொடக்க கட்டமாகச் சில படிப்பகங்களை நடத்திட அனுமதிக்குமாறும் இக் கூட்டம் தமிழர் தலைவரைக் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிந்தவர்: இரா.வெற்றிக்குமார்
(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
தீர்மானம் எண் 7:
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருக!
அறிவியல் வளர்ச்சி பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலும், மூடநம்பிக்கைகளால் நம் நாட்டில் தொடர்ந்து கேடுகள் நடப்பது அவமானகரமானதாகும். ஒன்றிய அரசும், மத நிறுவனங்களும், ஊடகங்களும் இத்தகைய மூடநம்பிக்கைகளுக்குத் தூபம் போட்டு பெரிதாக்கிவருவது இந் நிலையை மேலும் மோசமாக்குகிறது. மூட நம்பிக்கைகளைத் தோலுரிக்கும் பிரச்சாரத்தை அதிகப்படுத்திட, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரக் குழுவை வலுப்படுத்துவதும் அவசியமாகிறது. இயக்கப் பிரச்சாரத்திற்கும், அறிவியல் விழிப்புணர்வுக்கும் இளைய தலைமுறை பிரச்சாரகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்து, இளைஞர்களை அத் திசையில் ஆற்றுப்படுத்துவது என்றும் இக் கூட்டம் முடிவு செய்கிறது. மேலும், மக்களை மூடத் தனத்தில் மூழ்கடிக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளைத் தண்டிக்கவும், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையான 51 ஏ (எச்)-இன் படி அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் செயல்களின் ஈடுபடவும், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அவசியமானது என்பதை இக் கூட்டம் தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டுவதுடன், பல துறைகளிலும் இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு இச் சட்டத்தைக் கொண்டுவந்து பகுத்தறிவு வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணியில் திகழ வழிவகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.