– செல்வ மீனாட்சி சுந்தரம்
மேற்சட்டை காற்சட்டை உள்ம றைத்த
வெடிகுண்டைத் தேடுவரோ? இல்லை! இல்லை!
தோட்பையுள் தங்கமிட்டுக் கடத்து வாரைத்
துருவித்தான் ஆய்வாரோ? இல்லை! இல்லை!
மேற்புரளுந் தாலியினை அகற்றச் சொன்னார்!
மங்கைவிடு தலைபெறவா? இல்லை! இல்லை!
வேல்காட்டித் தோடுவளை கழற்றச் சொல்லி
மிரட்டுகின்ற கள்வர்களோ? இல்லை! இல்லை!
வீழ்கூந்தல் முடிந்துவைத்தால் விரித்துப் பார்க்கும்
மிளிரழகு நிலையமதோ? இல்லை! இல்லை!
பாழ்பட்ட உள்ளாடை ஊக்க ணிந்தால்
பதறித்தான் இரங்கினரோ? இல்லை! இல்லை!
மேற்சட்டைப் பொத்தானொன் றதிக மென்றார்!
முறைசெய்யும் சட்டமுண்டோ? இல்லை! இல்லை!
கால்மறைக்குங் காலணியைக் கண்டொ றுக்கக்
கற்காலம் பிறந்தவரா? இல்லை! இல்லை!
இல்லையில்லை என்றுரைத்தால் இவர்கள் யாரோ?
ஈங்கிவர்க்கிவ் வதிகாரம் தந்த தாரோ?
சல்லடையாய்ப் பிள்ளைகளைச் சலித்தெ டுத்துத்
தன்முனைப்பால் தாண்டவமேன் ஆடு வாரோ?
சொல்லம்பால் பிள்ளைகளைத் துளைத்தெ டுத்துச்
சொக்கட்டான் போலுருட்டி அலைப்பா ராரோ?
வல்லாங்கு செயவார்போ லுடம்பைத் தொட்டு
வாதைதரும் வன்கணாளர் யாரோ? யாரோ?
பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிழ்த முண்ணப்
பங்களிக்க மறுத்தகதை நடத்திக் காட்ட
நூற்கடலைக் கடைந்தறிவைக் கொள்வ தற்கு
நூலணிந்த தோளருக்கே வாய்த்த தென்றே
காற்பிறந்த சூத்திரர்க்கா கல்வி யென்றே
கண்சிவந்து சனாதன மையை யூற்றி
நீட்டென்னுந் திட்டத்தை வரைந்தி சிக்கும்
நாக்பூரின் நரிகளிவர்! நச்சுப் பாம்பு!
கோடாரிக் காம்பெனவே கூச்ச மற்றுக்
குலத்தளிரைக் கொய்தழிக்கச் சில்லோ ரிங்கே
கேடாற்று கின்றாரே! வெட்கக் கேடு!
கூட்டாகச் சென்றாரே கள்வ ரோடு!
ஊடாடி ஊர்பிரித்த உலுத்தர் சிந்தும்
எச்சிலுண்ண வாலாட்டும் நாய்கள் போல
நாடாளு மதிகாரம் நரிகள் கொள்ளத்
தமிழிசைவாய் ஊளையிடத் தவிக்கும் போலும்!
நம்பிள்ளை கற்பதற்கே நமது நாட்டில்
நந்தேட்டங் கொட்டித்தான் கோட்டஞ் செய்தோம்!
எம்முறையில் பிள்ளைகளைத் தேர்வ தென்றே
எமக்குரைக்க வேறெவர்க்கும் உரிமை யுண்டோ?
நம்மக்கள் இனுமுறங்கி அமைதி கொண்டால்
நலிவுதரும் நீட்டென்னும் வஞ்ச கத்தால்
அம்மணமாய் ஆடையின்றி அமர வைத்தே
அவர்தேர்வை நடத்தும்நாள் தூர மில்லை!