புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்’ தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது.
நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும் கடல் சூழ்ந்து உள்ளது. இந்தப் பகுதியில் ‘இராமநாதசுவாமி கோயில்’ என்று ஒன்று பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கட்டடக்கலையை வைத்து கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்த இராவணனை இராமன் கொன்றுவிட்டு, ‘புஷ்பக விமானம்’ மூலம் அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இறங்கி, இராவணனை கொன்ற ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்குவதற்காக, இராமன் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ததாகவும்; அதுவே பிறகு இராமநாதசுவாமி கோயில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
‘பிரம்மஹத்தி தோஷம்’ என்றால் என்ன?
பிராமணர்கள் எனப்படும் பார்ப்பனர்கள் பிரம்மாவின் தலை பகுதியில் இருந்து தோன்றியவர்களாம்!
மற்றவர்கள் பிரம்மாவின் மற்ற பகுதிகளில் இருந்து தோன்றியவர்களாம்!
பார்ப்பனர்கள் மட்டுமே அனைத்து உரிமைகளும், தகுதியும் பெற்றவர்களாகவும்
மற்றவர்கள் விலங்குகளை போன்றவர்களாகவும் வேதங்கள் சித்தரிக்கின்றன.
ஆகையால் சூத்திரர்களைக் கொன்றால் எந்த பாவமும் கிடையாது. அதாவது ஒரு உயிரை கொன்றதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் பார்ப்பானை கொன்றால் உயிரைக் கொன்றதாக ஆகிவிடும். அதனால் கொன்றவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ என்ற பாவம் சூழ்ந்து விடும்.
இந்த பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்களை ‘பிரம்ம ராட்சஷ பிசாசு’ என்ற பிசாசு பின் தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வரும். இந்த தோஷம் நீங்க வேண்டுமானால் அதற்கான நிவர்த்தி பூஜை செய்ய வேண்டும்.
இந்தப்படி தான் (புராணப்படி) பிராமணனான இராவணனை இராமன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை உண்டாக்கி அதற்கு பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.
பல மதங்கள் தோன்றி பிறகு 6 மதங்களாக நிலைத்தன. (சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், காணாபத்தியம்)
இந்த ஆறு மதங்களும் தங்கள் தங்கள் மதங்களுக்கு ஒருவரை முழுமுதற் கடவுளாக பரிந்துரைக்கின்றன. அதாவது பரப்பிரம்மம்(மகாதேவ்).
இதில் சைவமும் வைணவமும் தங்கள் மதம் தான் உயர்ந்தது என
இன்று வரை போட்டி போட்டுக் கொண்டுள்ளன.
சைவ புராணங்களில் வைணவத்தை இகழ்ந்தும்; வைணவ புராணங்களில் சைவத்தை இகழ்ந்தும் எழுதப்பட்டுள்ளன.
‘சிவன் தான் முழு முதற்கடவுள். இராமனே சிவனை வழங்கினான்’. என பரப்புவதற்காக தான் இந்த இராமேஸ்வர இராமநாதசுவாமி கோயில் கதை ஆகும்.
வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ‘இராமேஸ்வரத்தை பற்றியோ! ‘இராமன் சிவலிங்கத்தை வணங்கினான்’ என்பதை பற்றியோ குறிப்பு கிடையாது.
இராமன் ‘மகேந்திர கிரி’ (மகேந்திர பர்வதம்) மலையின் மேலிருந்து, மலையின் அடிவாரத்தை கடலின் அலைகள் தொட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாகவும். பிறகு அடிவாரத்திற்கு வந்து, பாலத்தைக் கட்டி இலங்கை சென்றதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
இராமேஸ்வரத்தில் எந்த மலையும் கிடையாது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எந்த மலைகளும் கிடையாது. இந்த ‘மகேந்திர கிரி’ என்ற மலை, ஒடிசாவில் உள்ளது.
ஒடிசாவை பற்றி கூறிய கதையை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறுவதே ஒரு பெரிய புரட்டாகும்.
இராவணனை கொன்றுவிட்டு இலங்கையிலிருந்து ‘புஷ்பக விமானம்’ மூலம் ‘அயோத்தி’ திரும்பிய போது, நடந்த நிகழ்வுகளின் இடங்களை சீதைக்கு காட்டிக் கொண்டே வருவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகிறது. இடையில் இராமேஸ்வரத்தில் இறங்குவதாக வால்மீகி இராமாயணத்தில் கூறப்படவே இல்லை.
காளிதாசர் இயற்றிய ‘இரகு வம்சம்’ என்ற காவியத்திலும் ‘இலங்கையில் இருந்து அயோத்தி நோக்கி இராமரை சுமந்து கொண்டு புறப்பட்ட புஷ்பக விமானம், இடையில் எங்கும் இறங்காமல் அயோத்தியில் தான் இறங்கியது.’ என்று கூறப்பட்டுள்ளது.
(ரகுவம்ச மஹா காவ்யம்,13ஆவது சர்க்கம்)
வால்மீகி இராமாயணத்தில் கூறப்படாத ஒரு நிகழ்வை, ‘மகாவிஷ்ணுவிற்கே ஈஸ்வரன் தான் கடவுள்’ என்று சொல்வதற்காக சைவர்கள், பிற்காலத்தில் சில புராணங்களை இயற்றி அதில் இராமாயணத்தை புகுத்தி சில திருத்தங்களை செய்து விட்டார்கள்.
சிவமகா புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் என்கின்ற சிவனை புகழும் புராணங்களில் இந்த புகுத்தல் வேலை நடைபெற்றுள்ளது.
பத்ம புராணத்தில் ‘பூர்வ கல்ப இராமாயணம்’ என்ற பெயரிலும், பிரம்மாண்ட புராணத்தில் ‘அத்தியாத்ம இராமாயணம்’ என்ற பெயரிலும் இராமாயணங்கள் உள்ளன.
இந்தப் ‘பூர்வ கல்ப இராமாயணத்’தில்
இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், இராமேஸ்வரத்தில் இராமன் இறங்கி, இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக, சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது.
(பத்ம புராணம், பூர்வ கல்ப இராமாயணம், பக்கம்-424, தாமரை நூலகம் வெளியீடு)
ஆனால் அதே ‘பத்ம புராணத்தில்’
‘மனிதர்கள் மோட்சம் அடைவதற்கான வழிகள்’ என்று விரதங்களையும் யாகங்களையும் பற்றி கூறும் போது, ‘பிராமணனை கொல்ல நேர்ந்ததைப் பற்றி சிறீ ராமபிரான் வருத்தம் அடைதல்’ என்ற தலைப்பில் (பக்கம்-364) ‘இராமன் பிராமணனான இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்க என்ன வழி’ என்று அகத்தியரை கேட்டதாகவும்; அகத்தியர், ‘அஸ்வமேத யாகம் நடத்தினால் பாவம் போகும்’ என்று கூறியதாகவும்; அதன்படி அஸ்வமேத யாகத்தை இராமன் நடத்தியதாகவும்’ உள்ளது.
ஒரு இடத்தில் இராவணனை கொன்ற பாவம் தீர, இராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை நிறுவி சிவ வழிபாடு செய்ததாகவும், அதே புராணத்தில் இன்னொரு இடத்தில் ‘அஸ்வமேத யாகம்’ நடத்தி, இராவணனை கொன்ற பாவத்தை போக்கிக் கொண்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்படுகிறது.
‘அத்தியாத்ம இராமாயணத்’தில் இராமேஸ்வரத்தின் கடற்கரையில் சிவலிங்கத்தை வழிபட்டுவிட்டு தான், இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
(அத்தியாத்ம இராமாயணம், நான்காவது சர்கம், பக்கம்-467, தாமரை நூலகம் வெளியீடு)
அதேபோல் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டு அயோத்தி செல்லும் வழியில் சீதைக்கு, தான் நிறுவிய சிவலிங்கத்தை காட்டிச் சென்றதாக, கூறப்பட்டுள்ளது.
சிவமஹா புராணத்தில், ‘சிறீ ராமர் பெற்ற வரமும் இராமேஸ்வரம் மகிமையும்’ என்ற தலைப்பிலான பகுதியில், தெற்கு கடற்கரை(இராமேஸ்வரம்)யில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டு, சிவனிடமிருந்து, வலிமையானவனான இராவணனை கொல்ல வரம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
(சிறீ சிவமஹா புராணம், முதற் பாகம், பக்கம் -248, பிரேமா பிரசுரம் வெளியீடு)
கந்தபுராணத்தில் பார்வதி நாதரை பூஜித்து பாசுபதாஸ்திரத்தை வரமாக பெற்றுக்கொண்டு இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
(சிறீ கந்தபுராணம், இரண்டாம் பாகம், உபதேச காண்டம் பக்கம்- 454, பிரேமா பிரசுரம்)
இராமன் (மகாவிஷ்ணு) கடவுள் அல்ல, சிவன் தான் கடவுள் என்று நிறுவுவதற்காக சைவர்களால் உண்டாக்கப்பட்டது தான். இராமேஸ்வர இராமநாதசாமி கோயில் கதையும், அதற்கு ஆதாரமாக புனையப்பட்டதே பத்ம புராணமும், பிரம்ம புராணமும், சிவமகா புராணமும் ஆகும்.
இது ஒரு புறம் இருக்க பராசக்தியை முழு முதல் கடவுளாக (மகாதேவ்) கூறும் ‘சாக்த மதத்’தின் புராணமான ‘தேவி பாகவதம்’ என்ற புராணத்தில் ‘மகாவிஷ்ணுவே (இராமர்) பராசக்தியை வழங்கினார்’ என்று சொல்வதற்காக இராமர் கிருஷ்கிந்தையில் துக்கப்பட்டு கொண்டிருந்தபோது, நாரதர் பராசக்தியை வணங்கி ‘நவராத்திரி விரதம்’ இருக்க கூறுகிறார். அதன்படி நவராத்திரி விரதம் மேற்கொண்டு, பராசக்தி இடம் இருந்து, போருக்கு உடந்தையாக இருக்க ‘சக்தியம்சத்’தை வரமாக பெற்றதாக’ கூறப்படுகிறது.