இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் பங்குச் சந்தைகள் சரிந்தன

Viduthalai
2 Min Read

மும்பை, மே 10– இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்று காலை நேர வர்த்தகத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது.

இன்று வரை நடைபெற்ற போரில் இந்தியாவின் மேன்மை நிரூபணமாகியுள்ளது. எனவே மேற்கண்ட மோதலை மேலும் அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 880.34 புள்ளிகள் குறைந்து 79,454.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 265.80 புள்ளிகள் குறைந்து, 24,008 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடுகள் ஏற்ற – இறக்கத்திலும், ஸ்மால்கேப் குறியீடுகள் 0.3 சசதவிகிதம் சரிந்து முடிவடைந்தன. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் கிரிட், அய்சிஅய்சிஅய் வங்கி, என்டிபிசி, எடர்னல், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயின.

நிஃப்டி-யில் அய்சிஅய்சிஅய் வங்கி, பவர் கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், சிறீராம் ஃபைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.

லார்சன் & டூப்ரோ நிறுவனம் மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 25 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,497 கோடியாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

டாடா குழும நிறுவனம் மார்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ.871 கோடியாக அறிவித்ததையடுத்து டைட்டன் நிறுவனம் 4 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.

துறை வாரியாக, ரியாலிட்டி குறியீடு 2.3 சதவிகிதமும், தனியார் வங்கி குறியீடு 1.3 சதவிகிதமும், மீடியா, நுகர்வோர் சாதனங்கள், மூலதன பொருட்கள், பொதுத்துறை வங்கி குறியீடுகள் 0.9 முதல் 1.6 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

ஜிண்டால் சா, ராம்கிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஸ்னைடர் இன்ஃப்ரா, சின்ஜீன் இன்டர்நேஷனல், கேலக்ஸி சர்பாக்டான்ட்ஸ், ஏசிசி, ஏஐஏ இன்ஜினியரிங், வேதாந்த் ஃபேஷன்ஸ், கெம்ப்ளாஸ்ட் சன்மார், ஷீலா ஃபோம் உள்ளிட்ட 190 பங்குகள் 52 வார குறைந்த விலையை பதிவு செய்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிந்த நிலையில் ஜப்பானின் நிக்கேய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன. அமெரிக்க சந்தைகள் 8.5.2025 அன்று உயர்ந்து முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 8.5.2025 அன்று ரூ.2,007.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.53 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 63.17 டாலராக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *