புதுடில்லி, மே 9 உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்த எந்த மாநிலத்தையும் கட்டாயப் படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
தள்ளுபடி
உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜி.எஸ். மணி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் எந்தவொரு மாநிலத்தையும் தேசிய கல்விகொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று அமர்வு கூறியது.
“மாநிலங்கள் தேசியக் கல்விகொள்கை 2020-அய் ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் மூலம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். தேசியக் கல்விகொள்கை போன்ற ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள ஒரு மாநிலத்தை நேரடியாக கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், இக்கொள்கை தொடர்பாக ஒரு மாநிலத்தின் செயல் அல்லது செயலற்ற தன்மை ஏதேனும் அடிப்படை உரிமைகளை மீறினால் நீதிமன்றம் தலையிடலாம்.
மேலும் மனுதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் புது டில்லியில் வசித்து வருகிறார் என்று அவரே ஒப்புக்கொண்டார். இத்தகைய சூழ்நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று கூறினார்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தவுடன், மனுதாரரிடம், “நீங்கள் யார்? தேசிய கல்விக் கொள்கையில் உங்களுக்கு என்ன சம்பந்தம்?” என்று நீதிபதிகள் கேட்டனர்
அதற்கு மனுதாரர், தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்றும் தற்போது டில்லியில் வசித்து வருவதாகவும், ” இருமொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்காதது போன்ற காரணமாக தன்னால் ஹிந்தியை எளிதாகக் கற்க முடியவில்லை என்றும் கூறினார்.
அதற்கு நீதிபதி பர்திவாலா, “அப்படி யானால் இப்போது டில்லியில் வசிக்கிறீர்கள் இங்கு நீங்கள் ஹிந்தி கற்றுகொண்டுவிட்டீர்களே என்று மனுதாரரிடம் கூறினார்.
முன்னதாக,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசியக் கல்விகொள்கையை மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தார். மும்மொழிக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.