புதுடில்லி, மே 9 அரசியல் கட்சிகளை ஆர்டிஅய் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று (8.5.2025) ஒத்திவைத்தது.
தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளை ஆர்டிஅய் வரம்புக்குள் கொண்டு வரக்கோரி கடந்த 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற தொண்டு நிறுவனம், வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தலில் கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதால், அரசியல் கட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட அரசியல் கட்சிகளை ஆர்டி அய் வரம்புக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட கோரி இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
15ஆம் தேதி விசாரணை
இதற்கு பதில் அளிக்க கோரி ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் 6 அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்நத 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கன்னா வரும் 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் இந்த மனு மீதான இறுதி விசாரணை வரும் 15-ஆம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.