புதுடில்லி, மே 8- ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிபடுத்திய இந்திய அரசு பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நேற்று (7.5.2025) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களில் துல்லியமாக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மே 7, 2025 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் விரிவான விளக்கமளித்தனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
கர்னல் சோபியா குரேஷி
44 வயதான சோபியா குரேஷி குஜராத் தைச் சேர்ந்தவர், ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா, தந்தை, மற்றும் கணவர் ஆகியோரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள்
பணி: ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸ் பிரிவில் அதிகாரியாக பணியாற்றும் சோபியா 2020இல் உச்ச நீதிமன்றத்தால் பாலின சமத்துவம் தொடர்பாக சிறப்பிக் கப்பட்ட 11 பெண் அதிகாரிகளில் ஒருவர். ஆபரேஷன் சிந்தூரின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் முக்கிய பங்காற்றியவர். செய்தியாளர் சந்திப்பில், தாக்குதலின் முதல் இலக்குகள், ராணுவத்தின் நடவடிக்கைகள், மற்றும் துல்லியமான தாக்குதல்களை விளக்கினார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்
இந்திய விமானப்படையில் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் விமானியான வியோமிகா சிங், 2004இல் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் மூலம் விமானப்படையில் இணைந்தார். விமானப்படையில் பெண்கள் குறைவாக இருந்தபோதும், தனது உறுதியால் இந்தப் பணியை தேர்ந்தெடுத்தார்
பணி: இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விங் கமாண்டர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படையின் பங்கு குறித்து விரிவாக விளக்கினார் – பங்களிப்பு: தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரபேல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் செயல்பாடு குறித்து செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்
ராணுவத் தாக்குதல் ஏன்?
“இந்த தாக்குதல்கள் தீவிரவாத முகாம் களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டன. பாகிஸ்தான் பொதுமக்கள் அல்லது ராணுவ நிலைகள் தாக்கப்படவில்லை என்று இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்தியா இந்த தாக்குதலை மேற்கொண்டது.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.