சென்னை, மே 8- கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குநர் (புள்ளியியல்) உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
நேர்முகத் தேர்வுகள் கொண்ட இந்தப் பணியிடங்களுக்கு வருகிற மே 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் (ஜூன்) 11ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.
இந்தப் பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என 2 நிலைகளை கொண்டது. எழுத்துத் தேர்வை பொறுத்தவரையில், தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு தரத்தில் வினாக்கள் இடம்பெறும். எழுத்து, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர் வர்களின் தரவரிசையை தீர்மானிக்கும் என்றும், தேர்வர்களின் நலன் கருதி முதல் முறையாக பாடத்திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) தெரிவித்துள்ளது.