ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக் களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை! செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் சிந்தி யுங்கள், பகுத்தறிவுள்ள மனிதராகுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:-
செய்தி ஏடுகளான நாளேடுகள், செய்தி ஊடகங்களான தொ(ல்)லைக்காட்சிகள் இவற்றைத் திறந்தால், அத்தனையும் பகுத்தறிவையும், தன்னம்பிக்கையையும் மனிதர்களிடமிருந்து ‘பறிமுதல்‘ செய்யும் வகையிலும், மதவெறி, மூடநம்பிக்கைகளை மொத்தக் குத்தகைக்கு எடுத்துப் பரப்புதலையும் இவ்விரு அமைப்புகளும் (1.பத்திரிகை 2. தொலைக்காட்சி), பிற ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றன!
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு (5.5.2025) திருச்சியில் தங்கியிருந்தேன். வழமைபோல் மாலையில் வெளியாகும் நாளேடுகளைத் தந்தார்கள்.
கோவில் திருவிழா என்ற பெயரால்
பெரும் சுரண்டல்!
டில்லியில் எப்படி காற்று மாசடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர்கொல்லியாகிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல, குடிகாரனின் போதையைத் தெளிய விடாமல், மேலும் மேலும் மதுவை ஊற்றிக் கொடுத்து, அவனது உயிருக்கு ஆபத்து உண்டாக்கி, அவனிடம் உள்ளதைக் கொள்ளையடித்துச் செல்ல எப்படி ஒரு கூட்டம் உள்ளதோ, அதுபோல, நாள் தவறாமல் திருவிழா, திருவிழா என அவற்றின்மூலமாக ஊரார் பொருளுக்கு உலை வைத்து, ஜாதி மத வெறுப்புப் பிரச்சாரம், கலவர ஒத்திகைக் களங்களாக்கிச் சுரண்டும் புரோகித மற்றும் ‘‘கடவுளின் பொருளை‘‘ வெல்லம்போல் விழுங்கும் எத்தர்களும், பித்தர்களும் நாளும் பெருகிய வண்ணம் இருக்கிறார்கள்!
பல ஆண்டுகளுக்குமுன் ‘அட்சய திருதியை’ நாளன்று பவுன் வாங்கி வைத்தால் தங்கம் பெருகும் என்று ‘கதை கட்டு உண்டா?
‘நகை’ வியாபாரம் செழிக்க இப்படி ஒரு தந்திர வித்தை?!
‘பச்சைக் கலர் புடவைகள்’ விற்காமல் தேங்கியிருந்தால், அதற்கொரு மகிமை கூறி, சேலை விற்றல் பித்தலாட்டம்!
நாள் மாறி மாறி, வார ராசி பலன், மாத பலன், ஜோதிடப் புரட்டுமூலம் தொலைக்காட்சி, நாளேடுகளில் – ‘குரு பெயர்ச்சி’, ‘சனிப் பெயர்ச்சி’, ‘ராகு – கேது பெயர்ச்சி’, இப்படி மனிதர்களின் அறிவைச் சூறையாடும் சுகத் தொழில் நடத்தி சுரண்டும் கூட்டம்! அந்தோ கொடுமையோ, கொடுமை!
வண்ண வண்ணமாகக் கயிறு திரித்து – கைநிறைய கட்டிக் கொள்வதால் கிருமித் தொற்றுதான்!
கயிறுகளைப் பலப்பல வண்ணங்களில் கை நிறைய விதவிதமாக தண்டுகளாகக் கட்டிடுவது, அறிவியல் ஆய்வுப்படி தொற்று நோய்களை, கிருமிகளைத் தேக்கி வைக்கும் ஒன்று என்று அறியாத மெத்தப் படித்த ‘அறிவு ஜீவிகள்!‘
இவற்றிற்கும், விஞ்ஞானத்திற்கும் கடுகளவு தொடர்பு உண்டா?
‘‘செட்டிப் பெண்ணுக்கு சுவாமி மருத்துவம் பார்த்த வைபவம் கோலாகலம். திரளான பக்தர்கள் தரிசனம்’’ – ஒரு மாலை நாளேட்டில் செய்தி!
அதே நாளில் மற்றொரு மாலை ஏட்டில், ‘‘அண்ணாமலையாரை குளிர்ச்சிப்படுத்தும் தாரா அபிஷேகம்!’’
– வடலூர் வள்ளலார் கூறினாரே, ‘‘எல்லாம் பிள்ளை விளையாட்டே’’ என்று. அந்த வேடிக்கை – பெரியவர்களின் பிள்ளை விளையாட்டு இது!
‘‘குளித்தலையில் பயங்கரம் – கோவில் பூச்சொரிதல் விழாவில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம்; பதற்றம், போலீஸ் குவிப்பு!’’
– கடவுள் திருவிழா மனித உயிர்களை, அதுவும் பல காலம் வாழ்ந்து சாதிக்க வேண்டிய இளைஞர்களை இப்படி ‘பக்திப் போதை’ ஊட்டி, கொலைக்கு ஆளாக்குவதா?
பகுத்தறிவாளர்களாகிய நம் நெஞ்சத்தில், ரத்தக் கண்ணீர் வடிகிறது!
‘‘கோவிலுக்குப் போய் திரும்பும் வழியில் சாலை விபத்து; குடும்பத்தோடு பலர் பலி! இதுபோன்ற செய்திக் கொத்துக்கு நாளும் பஞ்சமா?
பகுத்தறிவைப் பயன்படுத்தி, கொஞ்சம் சிந்தியுங்கள், பக்தர்களே!
உழைப்பில்லாக் கூட்டத்தின் சுரண்டல்!
கடவுள்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளாரே, அதை வீட்டுக்குள்ளேயே வைத்து வணங்கி, சுருக்கிய செலவோடு நடத்தினால், அந்தக் கடவுள் ஏற்கமாட்டாரோ?
உழைப்பில்லாக் குருக்கள், அர்ச்சகர்கள் கூட்டத்தினால், இப்படி உழைத்திடும் வர்க்கத்தினர் ஏமாறுவது தொடர் கதையாகலாமா?
விண்வெளிப் பயணம் – செயற்கை நுண்ணறிவுக் (Artificial Intelligence-AI) காலத்திலும் இப்படியா மூடத்தனத்தின் முடைநாற்றம்? ‘பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்’ என்றார் தந்தை பெரியார். அது எவ்வளவு உண்மை பாருங்கள்.
யோசியுங்கள், நீங்கள் உண்மையான பகுத்தறிவுள்ள மனிதராவது எப்போது?
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.5.2025