புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் வார விழா 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை உரிமைத்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

viduthalai
3 Min Read

சென்னை, மே 6 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ் வார விழா’ நிறைவு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (5.5.2025) நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் மெர்வின், ஆ.பழநி, கொ.மா.கோதண்டம், புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை செய்து நூல் உரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவர்களின் மரபுரிமையினருக்கும், எழுத்தாளர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

5 சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் நாட்டுடைமை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை சிறப்பிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த ஏப்.22ஆம் தேதி 110- விதியின்கீழ் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும்’ என அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறையால் இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வழிகாட்டுதலின்பேரில், தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து கடந்த ஏப்.29 முதல் மே.5-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

தலா ரூ.10 லட்சம் உரிமைத் தொகை

தமிழ் வார விழாவின் நிறைவு நாளான நேற்று (5.5.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், கலை பண்பாட்டுத் துறை யின் இசைக் கல்லூரிகள் மற்றும் கவின்கலை கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே நடத் தப்பட்ட புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் அவர்களின் பெருமையை போற்றும் இசை, நடனம் மற்றும் ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார். விழாவில், பல்லவி இசைக் குழுவினரின் ‘பாவேந் தரின் எழுச்சி பாடல்களும்’, நரேந்திர குமார் நடன அமைப்பில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மாணவியர்களின் தமிழ் அமுது- நாட்டிய நிகழ்ச்சியும், அனர்த்தனா குழுவினரின் ‘சங்கே முழங்கு’ நடன நிகழ்ச்சியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி தலைமையில் ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா.. சமூக உணர்வா.. என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, அய்யுஎம்எல் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர் க.மணிவாசன், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநகர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *