புதுடில்லி, மே 6 எச்சில் இலை யில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த நவீன் குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் மாவட்டம் நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர் சபை சார்பில் 18.5.2024 அன்று ஜீவசமாதி நாள் அனுசரிப்பதையொட்டி அன்ன தானம் மற்றும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க ‘வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த நிகழ்ச்சி திட்ட மிட்டபடி நடத்தப்பட்டது.
இதற்கிடையே தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கரூர் ஆட்சியர் சார்பில் மேல்முறையீட்டு மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல திருவண்ணாமலையைச் சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் என்பவரும் தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
தடை நீட்டிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய தடை விதித்து தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து நெரூர் சத்குரு சத்சிவ பிரமேத்திரர் சபை சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜோய் மாலயா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்டம் நெரூரில், எச்சில் இலைகள் மீது உருளும் வழக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்ததுடன், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.