சென்னை, மே.5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசின் 4 ஆண்டுகால சாதனைகளுக்கு கிடைத்தவிருதுகளை பட்டியலிட்டு, தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலக நாடுகள் பாராட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. அவரது ஆட்சியில் தொலைநோக்கு சிந்தனைகளுடன் திட்டமிட்டு வகுத்து நடை முறைப்படுத்தி வரும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழி காட்டுகின்றன.
காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும், அய்.நா. மன்றத்திலும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் எனப் பாராட்டப்பட்டபோது, எனக்கு புகழோ, பாராட்டோ தேவையில்லை, தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் எனப் புகழப்படுவ தையே விரும்புகிறேன். அதுவே எனது ஆசை என்று கூறி, அந்த இலக்கை இன்று அடைந்து புகழின் உச்சத்தைத் தொட்டுள்ளார் நமது முதலமைச்சர்.
விருதுகள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அதுல்ய மிஸ்ரா டில்லியில் 30.11.2024 அன்று நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் பன்னாட்டு விளையாட்டுக் கருத்தரங்கில் 2024ம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு வழங்கிய விருதை 4.12.2024 அன்று காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப் பட்டு ஒன்றிய அரசால் 6.12.2021 அன்று வழங்கப்பட்ட விருது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 8.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்காகவழங்கிய தேசிய விருது. 13.12.2021 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகள்
சுகாதாரம்
நீர் மேலாண்மைக்காக 29.3.2022 அன்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கான விருது. மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெங்கையா நாயுடு 25.4.2022 அன்று வழங்கிய சிறந்த ஏற்றுமதியாளர் விருது. தமிழ்நாட்டின் 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் 11.5.2022 அன்று வழங்கிய விருது.
மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் என 27.6.2022 அன்று வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருது, இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 112 மாவட்டங்களில் ஒன்றாக குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்காக விருதுநகர் மாவட்டத்தின் சிறந்த பங்களிப்பிற்கு 1.7. 2022 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவிலான முதல் பரிசு.
சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு 2.10.2022 அன்று வழங்கப்பட்ட குடியரசுத் தலைவர் விருது.
காசநோய் ஒழிப்பு
ஜல்சக்தி திட்டத்தை தமிழ் நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி முதலிடம் பெற்றமைக்காக 2.10.2022 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய தேசிய விருது. காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி- வாரணாசியில் 6.4.2023இல் நடைபெற்ற நிகழ் வில் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள்.
காகிதம் இல்லா சட்டமன்றத் திட்டத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் 3.7.2023 அன்று வழங்கிய விருது. டில்லி பிரகதி மைதானத்தில் 20.11.2023 அன்று நடைபெற்ற உலக உணவுத்திருவிழாவில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது.
டில்லியில் குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 30.1.2024 அன்று வழங்கப்பட்ட தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்ற விருது.
முதலமைச்சருக்கு மகுடம்
தர்மபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 14.8.2024 அன்று வழங்கிய முதல் பரிசு. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக அய்.நா.அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான யுனைடெட் நேஷன், ‘இண்டர்ஏஜென்சி டாஸ்க் போர்ஸ்’ விருதை முதல்-அமைச்சரிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இதுமட்டுமல்ல பல்வேறு பத்திரிகை நிறுவனங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியைப் பாராட்டி மிகப்பல விருதுகளை வழங்கியுள்ளன.
தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சியில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகளுக்காக மத்திய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுப் பட்டியலைக் காணும்போது, மிகச்சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் எனப் பலரும் முதலமைச்சருக்கு மகுடம் சூட்டுவது நமது தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ள தனிப்பெரும் சிறப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.