மக்களாகட்டும், சமுதாயமாகட்டும், நாடா கட்டும் அவை எந்த நிலையில் இருந்தாலும் அவற்றின் தகுதிக்கு ஏற்றதாகத்தான் அந்த நிலைகள் பெரிதும் இருக்கும் என்பது நியாயமான பேச்சேயாகும்.
ஒரு கூட்ட மக்கள் இழிநிலையில் இருக்கிறார்கள் என்றால் அது அந்தக் கூட்ட மக்களின் தகுதிக்கு ஏற்றது என்று சொல்ல வேண்டுமே தவிர மற்றபடி அவ்விழிமக்கள் மற்றவர்களால் இழிநிலையில் வைக்கப் பட்டார்கள் என்று சொல்லுவது அறிவுடைமையான, அர்த்தபுஷ்டி உள்ளதான பேச்சாகாது. அதுபோலவே ஒரு நாடு அடிமைத் தன்மையில் இருக்கிறது என்றால் அந்தத் தன்மை அந்நாட்டின் தகுதிக்கு ஏற்றதே தவிர, அடிமை கொண்ட மக்கள் தன்மையால் அடிமை நிலை எய்திற்று என்று சொல்லுவதும் யோக்கியமான சொல்லாகாது.
அதே காரணம் தானே?
ஆங்கிலேயன் இந்திய நாட்டை அடிமை கொண்ட தற்கு எது காரணமோ, அதே தான் ஆரியன் திராவிடர்களை இழிநிலையில் வைத்துப் பயன் பெறுவதற்கும் காரணமாகும்.
உதாரணமாக, இன்று ஆங் கிலேயன் இந்த நாட்டைத் தனது ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து விட்டுவிட்டுப் போகிறேன் என்றால், இந்தியர்கள் அதைத் தைரியமாய் ஏற்றுக் கொள்ள முடியாமல், கலகம் – குழப்பம் நடத்திக்கொண்டிருப்பதற்குக் காரணம் இந்தியரின் தகுதி இன்மை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
அதுபோலவே திராவி டர்களை ஆரியர்கள் இனி மேல் அடிமை என்றோ, சூத்திரர் என்றோ சொல்லி வலியுறுத்தத் தகுதியற்ற தன்மையில் இருந்தாலும், திராவிடர்கள் சூத்திரன், அடிமை என்கின்ற தன்மையை வெறுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் இன்னும் திராவிடன் தகுதி பெறவில்லை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?
‘தகுதி உடையவன் அடைந்தே தீருவான், தகுதி யற்றவன் பிறர் கொடுத்தாலும் அடைய மாட்டான்’ என்பது நியாயமான பேச்சேயாகும்.
ஆரியர் தம் ஆதிக்கம் நிலைத்திருக்கப் பாடு படுகிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்கப் பாடுபடுகிறார்கள். அதுபோலவே தொழிலாளிகள் தங்கள் நலனுக்கும், ஷெடியூல் வகுப்பார் என்னும் மக்கள் தங்கள் நலனுக்கும், ஆசிரியர்கள் தங்கள் நலனுக்கும், வியாபாரிகள் தங்கள் நலனுக்கும் மார்வாடி, பனியாக்கள் தங்கள் நலனுக்கும் இப்படியாகப் பலப்பல லட்சியமுள்ள மக்கள் தத்தமது நலனுக்குப் பாடுபடுகிறார்கள்.
ஏதாவது லட்சியம் உண்டா?
இந்தத் திராவிடர்கள் (சூத்திரர்கள்) எதற்காகவாவது பாடுபடுகிறார்களா? இவர்களுக்கு ஏதாவது ஒரு பொது லட்சியம் உண்டா? இவர்களது வலுவான இழிவைப் பற்றியாவது கவலைப்படுகிறார்களா? கலைக்கும், காவியத்துக்கும், புராணத்துக்கும், இதிகாசத்துக்கும், மொழிக்கும், சமயத்துக்கும் என்பதாகத் தம் வாழ்வின் உயர்வுக்கும், இழிவு நீக்கத்திற்கும் சம்பந்தமில்லாத வயிறுநிறைந்த ஆரியர்கள்போல் ஏதேதோ காரியத்தில் கவலையைக் காட்டுகிறார்களே தவிர இழிவு நீங்கும்படியான சமுதாயத்துக்குப் பயன்படும்படியான காரியம் எதற்காவது கவலைப்படுகிறார்களா?
இதைத்தான் நாம் திராவிடர் தகுதிக்கு ஏற்றதான நிலை என்று சொல்லுகிறோம்.
இஸ்லாம் ஆட்சி இந்தியாவில் இருந்து விலகினநாள் முதல் இன்றுவரை இந்நாட்டில் எல்லாத் துறையிலும் ஆரிய ஆட்சி சர்வாதிகாரம் செய்து வந்ததே தவிர, என்றாவது பிரிட்டிஷ் ஆட்சி இருந்தது என்று எந்த உண்மை அரசியல்வாதியாவது சொல்லமுடியுமா? அன்றியும் அரசியல் கிளர்ச்சி என்பதாக ஒன்று (காங்கிரஸ்) இந்நாட்டில் நடந்துவந்ததானது துவக்கத்தில் இருந்து முஸ்லிம்களுக்கும், திராவிடர்களுக்கும் விரோதமாக நடந்து வந்தது என்பதல்லாமல் என்றாவது பிரிட்டிஷாருக்கு விரோதமாக ஏதாவது நடந்தது என்று யாராவது சொல்லமுடியுமா? இந்தச் சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் விழித்துக்கொண்டு தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயன்று இன்று கிளர்ச்சி செய்யும் தன்மைக்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லலாமே தவிர திராவிடரில் யாராவது இதை உணர்ந்தார்களா? கவலைப்பட்டார்களா? ஏதாவது செய்ய முன் வந்தார்களா? என்று யோசிக்கவேண்டுகிறோம். திராவிடர்களுக்குக் குறை இல்லையா? இழிவு இல்லையா? முன்னேற்றத் தடை இல்லையா? கவலைப்பட வேண்டாத மாதிரி எது இல்லாமலிருக்கிறது? வெட்கப்படும் மாதிரி, வேதனைப்படும் மாதிரி எத்தனைக் கேடுகள் இருக் கின்றன. இவ்வளவு கேடுகள், இழிவுகள் இருந்தும் ஒரு திராவிடனுக்கும் கவலையோ வெட்கமோ ஏற்பட்டதாகக் காணக்கூடவில்லையே ஏன்? இதைத் தான் நாம் திராவிடன் மனிதத் தன்மை பெறுமானம் பெறத் தகுதியற்றவனாக இருக்கிறான் என்கின்றோம்.
சமநிலைக்குத் தகுதியற்றவனா?
திராவிடனின் எல்லாத் தகுதியையும் இந்து சமயம் என்னும் ஆரியப்பாம்பு விழுங்கிவிட்டது. அதனால்தான் சிவபக்தனாகவும், வைணவ பக்தனாகவும் இருந்துகொண்டு மொட்டையும் பட்டையும் அணிந்து ஆரியத்திற்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறான். அதனால்தான் நல்ல வீரமுள்ள திராவிடன் வெட்கம், மானம், சொரணை, சூடு இல்லாமல், நான் சத்திரியன், நான் வைசியன், நான் நல்ல இந்து என்று சொல்லிக் கொண்டு பார்ப்பானுக்குக் (பிராமணனுக்கு) கீழ்ஜாதியாய் இருப்பதைப் பெருமையாய்க் கருதுகிறான். சத்திரியன் என்றாலும், சூத்திரன் என்றாலும், பிராமணனுக்குக் கீழானவன் என்று தானே கருத்து. அதைத் திராவிடன் தானாகவே சொல்லிக்கொள்கிறான் என்றால் சமநிலைக்குத் தகுதி அற்றவன் என்று தானே கருத்து?
சிந்தித்துப் பாருங்கள் திராவிடத் தோழர்களே, இஸ்லாம் என்றால் உங்களுக்கு ஆத்திரம் வருகிறது; சத்திரியர், வைசியர் என்றால் பெருமை அடைகிறீர்கள், சூத்திரர் என்பதை இழிவு என்று கருதமாட்டேன் என்கிறீர்கள். இப்படிபட்ட நீங்கள் இந்துவாய் இருக்கும்வரை மானத்துக்கும், மனிதத்தன்மைக்கும் தகுதி அற்றவர்கள் என்பது கல்போன்ற உறுதியாகும். ஆகவே இந்து மதத்தைவிட்டு வெளிவாருங்கள்; உடனே நீங்கள் தகுதி ஆனவர்கள் ஆகிறீர்களா இல்லையா என்று பாருங்கள்.
இந்தக் கோடை விடுமுறையில் எந்த இடத்திலாவது ஒரு மகாநாடு கூட்டுங்கள், எதற்காக என்றால் திராவிடர்கள் மதத்தைப் பற்றி யோசிப்பதற்குத்தான். அல்லது இந்தக் கருத்துக்கொண்ட சுருக்கமான ஒரு பெயர் வைத்து ஒரு மகாநாடு கூட்டுங்கள். எல்லாத் திராவிட இளைஞூர்களை, தாய்மார்களைப் பெரிதும் 10 ஆயிரக்கணக்கில் கூட்டுங்கள். கூடிச் சிந்தியுங்கள் தகுதிக்கு வழி பிறக்கிறதா இல்லையா பாருங்கள். வெறும் பூச்சும், பட்டையும் திராவிடருக்கு இனி ஏச்சும், இழிவும்தான் தரும். இளைஞர்களே நீங்களாவது சிந்தியுங்கள்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 05.04.1947