என்.சி.ஆர்.டி. கல்வித் திட்டமா –
ஆர்.எஸ்.எஸின் கைவரிசையா?
என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தில் ஆங்கில நூலில்கூட ஹிந்தி சொற்களை திணித்து அதை மாணவர்கள் கட்டாயம் படிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இதுவரை கி.பி.1100க்குப் பிறகான இந்தியாவில் சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் வரலாற்றை முற்றிலும் நீக்கி உள்ளனர். அவர்களின் வரலாற்றை நீக்கி விட்டு அந்த இடத்தில் பண்டைய இந்தியாவின் பேரரசுகளை குறித்து இடம் பெற வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் மவுரியர்கள், சாதவாகனர்கள் உள்ளிட்ட அரசவம்சங்கள் போற்றிய பவுத்த சமண மதங்களை பற்றிப் பேசாமல் நிர்வாகம் மற்றும் போர்கள் குறித்து எழுதி யுள்ளனர். இந்த நூல்கள் அனைத்தும் 70 விழுக்காட்டிற்கு மேல் சமஸ்கிருத சொற்களே நிரம்பி வழிகின்றன.
“சமூகத்தை ஆராய்தல்: இந்தியாவும் அதற்கு அப்பாலும், பகுதி-1” என்ற தலைப்பிலான இந்தப் புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகம், மகதம், மவுரியர்கள், சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடை பெற்ற 2025 மகா கும்ப மேளா பற்றிய குறிப்புகளையும், கும்பமேளா தொடர்பான அனைத்துமே சமஸ்கிருத சொற்களால் நிரம்பி உள்ளன.
அத்தியாயம் அய்ந்து மகத வம்சத்தின் எழுச்சி, முக்கிய நபர்கள் மற்றும் மகதத்தை ஒரு சக்திவாய்ந்த பேரரசாக நிறுவுவதில் சாணக்கியன் பங்கு என்று அத்தியாயம் எங்கும் சாணக்கியன் புகழ் பாடித் தீர்க்கிறது.
மேலும் மவுரியர்கள் போற்றிய பவுத்தம் தொடர்பான எதையுமே எழுதாமல் கிரேக்கர்கள் மற்றும் மவுரிய மன்னர்கள் சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிடுகிறது.
அத்தியாயம் ஆறில் சுங்க மற்றும் சாதவாகன வம்சங்கள் மற்றும் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் போன்ற தென் இந்திய வம்சங்களைப் பற்றி குறிப்பிடும்போது ஸநாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய பணிகள்தான் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் 8, புனித யாத்திரை மூலம் நிலத்துடனான ஆன்மீகத் தொடர்பை ஆராய்கிறது, கும்பமேளா மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறது. இந்தப் பாடப்புத்தகம் இந்திய அரசியலமைப்பு பற்றிய அத்தியாயத்தையும் கொண்டுள்ளது, இது தேசியக் கொடியை பறக்கவிடும் உரிமை மற்றும் முன்மொழியப்பட்ட சட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது ஊறுகாய் போல!
இந்தியாவில் கி.பி.1100களுக்குப் பிறகான வரலாறு கட்டடக்கலைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்திய தீபகற்பம் முழுவதும் மவுரியர்கள் உள்ளிட்ட பல மன்னர் வம்சங்களின் கோட்டை கொத்தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. மவுரியர்களின் பிரமாண்ட அரன்மனைகள் எங்கே இருந்தது என்று இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்றும் முகலாயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட கோல்கண்டா கோட்டை முதல் சார்மினார். தாஜ்மகால் மற்றும் குதுப்மினார் போன்றவை இன்றும் இந்தியக் கட்டடக் கலையின் சான்றாக விளங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவின் 700 ஆண்டுகால வரலாற்றையே அப்படியே மறைத்து இந்தியாவின் வரலாற்றில் சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது போன்ற ஒரு மாயையை பாட நூல்கள் மூலம் மாணவர்கள் உள்ளத்தில் திணிக்க என்.சி.ஆர்.டி. மூலம் ஒன்றிய அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முயற்சி செய்து வருகின்றன. இது தொடர்பாக கல்வியாளர்கள் தங்களின் கவலையைத் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது அகில இந்திய அளவிலான கல்வி அமைச்சர்கள் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. (22.10.1998) அப்போது கல்வி அமைச் சராக இருந்தவர் ராம் மனோகர் ஜோஷி என்பதை மறந்து விடக் கூடாது.
தொடக்கத்தில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடப்பட்டது – தமிழ்நாடு கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் போன்றவர்கள் எதிர்த்தனர்.
ஆர்.எஸ்.எஸின் கல்வி நிபுணர் என்று கூறப்படும் சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட கல்வி தி்ட்ட மானது – ஹிந்திமயமாக்குதல், ஆத்மிக மயமாக்குதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கல்வித் திட்டம் அது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் எதிர்த்திடவே அந்தக் கல்வி திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
இப்பொழுது அத்தகைய கல்வி திட்டம் என்.சி.ஆர்.டி. மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை சிறு வயதிலேயே பாடத் திட்டத்தில் நஞ்சாகப் புகுத்தும் இந்த நரித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் கல்வியாளர்கள் இதில் கவனம் செலுத்தி ஆட்சி மூலம் ஆர்.எஸ்.எஸ். திணிக்க இருக்கும் இந்தக் கல்வி திட்டத்தை முறியடிக்க வேண்டும்.