சென்னை, மே 3- உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இயற்கை விவசாயம் மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குவது, அதற்கான சான்றிதழின் பதிவு கட்டணத்துக்கு முழு விலக்கு அளிப்பது, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் வசதிகள் ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்துக்கான தேசிய இயக்கம் என பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் இந்த 2025-2026ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளன.
நம்மாழ்வார் விருது
உயிர்ம (ஆர்கானிக்) விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகள் 2025ஆம் ஆண்டுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த த.ஜெகதீஸுக்கு 2ஆம் பரிசாக ரூ.1.50 லட்சத்துடன் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வே.காளிதாஸுக்கு 3ஆம் பரிசாக ரூ.1 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.5.2025) வழங்கினார்.
பணி நியமன ஆணை
வேளாண் துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், காலியாக உள்ள பணி யிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு வகையான தொழில் நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,799 பேருக்கும், பணிக் காலத்தில் காலமான ஊழியர்களின் வாரிசுகள் 265 பேருக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் முருகானந்தம், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, துறை ஆணையர் ஆபிரகாம், தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.