குரங்கு (ஹனுமான்) செத்துப் போச்சே!

2 Min Read

கருநாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் சுமஹள்ளி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்தக் கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் உலா வந்து செல்வது வழக்கம். பபூன் வகை குரங்கு கூட்டம் ஒன்று சுமஹள்ளி கிராமத்திற்கு அவ்வப்போது வந்து விளையாடி, பொருட் களை சிதறடித்து உணவுப் பொருட்களை அள்ளிச் சென்று விடும்.

இதேபோல் விளையாடிக் கொண்டு இருந்த போது ஒரு குரங்கு  மின்கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு மின்கம்பியைப் பிடித்து தனக்கே உரிய சேட்டையை செய்தபடி இருந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி குரங்கு அதாவது அந்த ஹனுமான் உயிரிழந்தது.

புதன்கிழமையன்று இந்தக் குரங்கு இறந்ததால் ஹனுமானுக்கு அது உகந்த நாளாம்! ஆகையால் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலர் அதற்கு இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ஊர் மக்களிடம் பணம் வசூலித்து, இறந்துபோன குரங்கின் உடலை பாடையில் வைத்து பூக்களால் அலங்கரித்தனர். பார்ப்பனர் ஒருவரை அழைத்து வந்து  பூஜைகள் செய்தனர்; (பணம் கிடைத்தால் பன்றிக்குக் கூட திதி கொடுக்க வந்து விடுவானே!) பின்னர் குரங்கின் உடலை பாடையில் வைத்து 4 பேர் சுமந்தனர்.  மேள தாளத்தோடு இறுதி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குரங்கின் உடலை குழி தோண்டி புதைத்து மீண்டும் பூஜை செய்தனர். 

 தற்போது செத்துப்போன குரங்கிற்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தியது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்தியதோடு மட்டுமல்லாமல், 11-ஆவது நாள் திதி கொடுக்கவும் ஏற்பாடாகி உள்ளது இதற்காக ஊர் மக்களிடம் பணம் வசூலிக்கும் வேலையில் மீண்டும் இறங்கியுள்ளனர்.  இது தொடர்பாக ஊர் மக்கள் கூறும் போது “வேலை வெட்டி இல்லாத சிலர் அவ்வப்போது குடிப்பதற்குப் பணம் சேர்க்க இவ்வாறு கிளம்பி விடுகின்றனர். எதிர்ப்புத் தெரிவித்தால் நம்பிக்கையை குலைக்கிறார்கள் என்று வம்புக்கு வருகின்றனர். இவர்கள் அழைத்துவரும் பூஜை செய்யும் பார்ப்பனருக்கு கணிசமான தொகை கிடைக்கிறது” என்று வெறுப்பாக பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

குரங்கு என்று அலட்சியமாகப் பேசக் கூடாது. அவன் இராம பக்த ஹனுமான்! மூலிகைக்காக சஞ்சீவ மலையையே  தூக்கி வந்து இலட்சு மணனுக்கு அந்த மூலிகையைக் கொடுத்து, உயிர்ப் பிச்சை கொடுத்தவன் என்று அள்ளி விடுவது ஒருபுறம் இருக்கட்டும்.

அவன்தான் ஹனுமான் – ராமபக்தன் – கடவுள் சித்தி – சக்தி உடையவன் என்பது உண்மை யானால் மின்சாரம் தாக்கி அது ஏன் செத்தது? இலட்சுமணனுக்கே உயிர் கொடுத்த ஹனுமான் – அற்பம் மின்சார ‘ஷாக்கிற்கு’ ஆளாகி சாகலாமா?

பக்தியைக் காட்டி பணம் பறிக்கும் குறுக்கு வழிதான் குரங்கை வைத்து வசூலிக்கும் ஏற்பாடு!

அசல் வெட்கக் கேடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *