பஹல்காம் தாக்குதல் அதனைத்தொடர்ந்து நடந்துவரும் பாதுகாப்பு தொடர்பான சந்திப்புகளால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஒரு பெரிய முடிவு தயாராகி வருகிறது என்று காட்டுவதிலேயே ஊடகங்கள் மும்முரமாக இருந்தன.
ஆனால், வந்த முடிவோ, எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை. ஏற்கெனவே பஹல்காம் தாக்குதல் தொடர்பான செய்தி கிடைத்த உடன் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்த பிரதமர் மோடி நேராக பீகார் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் மயிலுக்கு தானியம் வழங்கி கொண்டு இருந்தார். 10 நாள்களுக்குப் பிறகு ஒருநாள் காலை அனைத்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூட்டத்தை 13 “காமிரா”க்களோடு நடத்தியவர். மறுநாள் அதிகாரப்பூர்வமான அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைத்துக்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஜாதிவாரி கணகெடுப்பை நாங்கள் நடத்தப் போகிறோம் என்று அறிவிப்பு வருகிறது.
இவர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை கோருகிறவர்கள் நாட்டை பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் “ஏக் ஹை தோ சேப் ஹை” (ஒன்றாக இருந்தால் பாதுகாப்பு) என்று கூறினார். மேலும் எனது பார்வையில் 4 ஜாதி. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், மற்றும் விவசாயிகள் என்றார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரித்ததுண்டா?
இது மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று கூறப்பட்டது. இப்போது அதே பாஜக, அதே மோடி அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டு தங்களது வெற்றி என்று சொல்கிறது. பாஜகவும் அதன் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எப்போதுமே ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கவில்லை. 10 ஆண்டுகள் முழுமையான உறுப்பினர்களைக் கொண்ட நிலையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதற்கு முழு வாய்ப்பு கிடைத்தது.
மோடியின் கிண்டல்
ஆனால், அதைச் செய்யாமல் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதை எல்லாம், மோடியே தேர்தல் மேடையில் பகடி செய்துகொண்டு இருந்தார். அப்படியானால், இப்போது ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது? பஹல்காம் தாக்குதலைச் சுற்றி உருவாக்கப்பட்ட, அல்லது உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் இருந்து கவனத்தை திசைதிருப்பி, நாட்டை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அறிக்கையை விட்டு இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கு மேல் எவ்வளவு உயர்த்துவது என்ற கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் இட்டுச் செல்ல அரசு விரும்புகிறது. காரணம் 10 நாட்களைக் கடந்தும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து சிறு முன்னேற்றம் கூட எட்டப்படவில்லை.
கொலைகாரர்கள் இன்றும் (03.05.2025) இந்தியாவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதாக ஆங்கில செய்தி நிறுவனங்கள் உள்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசின் பின்னால் பஹல்காம் தாக்குதலில் எந்த முடிவை எடுத்தாலும் ஆதரிப்போம் என்று கூறி முதன் முறையாக முழு ஆதரவை தந்துள்ளன.
இருப்பினும் எந்த நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தங்களது இயலாமையை மறைக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற ஒன்றை கையில் எடுத்துள்ளது ஒன்றிய அரசு.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமே இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய வெற்றி இது என்று கூறலாம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய தயக்கத்திலிருந்து பாஜக வெளியே வந்துவிட்டதா? இப்போது அது இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதற்கு ஆதரவளிக்குமா? பல கேள்விகள் இத்தருணம் எழுந்துள்ளன.
மோடி அரசு ஏன்
இப்போது இந்த முடிவை எடுத்தது?
இப்போது இந்த முடிவை எடுத்தது?
எதிர்க்கட்சிகள் இந்த முடிவை வரவேற்பார்கள் என்பது அரசுக்கும் தெரியும், ஏனெனில் இது அவர்களின் முக்கியப் பிரச்சினை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், நாட்டின் எந்த மூலையிலும் தனது பேச்சுகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றியே பேசுகிறார். வெளிநாட்டுப் பயணங்களின் போதும் அவரது பேச்சுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றியே நிறைந்திருக்கும்.
பிரவுன் பல்கலைக்கழக நிகழ்ச்சியிலும்கூட ராகுல் காந்தி இதைப் பற்றிப் பேசினார். தேஜஸ்வி யாதவும் ஜாதிவாரி கணகெடுப்பு குறித்து பேசுகிறார். நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்த குறுகிய காலத்திலேயே, பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலமாக ஆனது.
அப்போது தேஜஸ்வி இதை இரவு பகலாக முக்கியமாக வலியுறுத்தினார், அழுத்தம் கொடுத்தார். ராகுல் காந்தி இந்த முடிவை தேசிய மற்றும் பன்னாட்டளவில் கொண்டு சென்றார். கருநாடகாவில்.காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
தெலுங்கானாவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2024இல் தொடங்கிய இந்த கணக்கெடுப்புக்கு 50 நாள்கள் ஆனது, 3.5 கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.
அனைவருக்கும் பங்களிப்பு
இந்தக் கணக்கெடுப்பின் முறைகள் மற்றும் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டாலும், தெலுங்கானா அரசு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் கூறி வருகிறார், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் எக்ஸ்ரே போன்றது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) எத்தனை பேர், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் நாடோடிகள் இதர சிறுபான்மையினர் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரங்கள் வெளிவரும்போதுதான், அனைவருக்கும் பங்களிப்பு அளித்து நாடு முன்னேற முடியும். ராகுல் காந்தி எந்த கொள்கையின் முகமாக ஆகிவிட்டாரோ, அந்த கொள்கையை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் ஏன் மோடி அரசு முத்திரைக் குத்தியுள்ளது?
“இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. சமூக சமத்துவம் இல்லை. நிதி மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லை.அதனால்தான் எங்கள் அடுத்த அடி ஜாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கும். நீங்கள் யாரையெல்லாம், எங்கெல்லாம் புறக்கணித்துள்ளீர்கள் என்பதை நாங்கள் நாட்டுக்குக் காட்ட விரும்புகிறோம்.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்களின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறெல்லாம் மறுத்துள்ளீர்கள் என்பதை நாங்கள் அவர்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அதனால்தான், இந்த அவையிலேயே நான் வாக்குறுதி அளித்தபடி, இங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவோம்.
அதன்பிறகு, இந்தியாவில் ஒரு புதிய வகையிலான வளர்ச்சி, ஒரு புதிய வகையிலான அரசியல் ஏற்படும். மேலும், நான் ஏற்கனவே கூறியது போல், 50 சதவீத இடஒதுக்கீட்டு சுவரை நாங்கள் இங்கே உடைப்போம். ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் இங்கே நடத்தி காட்டுவோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், செய்துகொள்ளுங்கள்” என்பனதான் ஒன்றிய அரசின் அறிவிப்பில் பொதிந்துள்ளவையாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே தீருவோம் என்று உறுதியளிப்பது எங்கேனும் நடக்குமா? எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே ராகுல் காந்தி உத்தரவாதம் அளிக்கிறார். அவர் உத்தரவாதம் அளித்து 10 மாதங்களுக்குப் பிறகு, மோடி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முடிவெடுக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) எம்.பி. மனோஜ் ஜா ஒரு நிகழ்ச்சியில் அவர், இதே அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்றார். கடந்த 10 ஆண்டுகளில், எதிர்க்கட்சித் தலைவர் அரசை ஒரு முடிவெடுக்க வற்புறுத்துவது இதுவே முதல் முறை.
. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய அரசாங்கத்தில் நிதிஷ் குமாரின் கட்சி தவிர, ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தன. 2023 இல் ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, இடஒதுக்கீடு…வரம்பு பீகார் அரசால் 50 சதவீதத்திலிருந்து உயர்த்தப்பட்டது. பீகார் அரசு 65% இடஒதுக்கீடு அளித்துள்ளது.
டாக்டர் மன்மோகன் சிங்
2010இல் அப்போதைய பிரதமர், மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று மக்களவையில் உறுதி அளித்தார். அதன் பிறகு, ஓர் அமைச்சரவைக் குழுவும் அமைக்கப்பட்டது. அதில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு பரிந்துரைத்தன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கேயின் ஒரு கடிதத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த கடிதம் ஏப்ரல் 16, 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்டது, அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரப்பட்டிருந்தது. இந்த கடிதத்தில், 2011 இல் நடத்தப்பட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பின் தரவு இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய கடிதம், அந்தக் கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் மே 2014 முதல் 2011 தரவை வெளியிடக் கோரி வருகிறோம் என்றார். ஆனால், மோடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை” என்று எழுதியிருந்தார். இன்றுவரை அந்த விவரம் வெளியிடப்படவில்லை.
ஸநாதனிகள் சமத்துவத்திற்கு எதிரானவர்கள்
ராகுல் காந்தி தொடர்ந்து பேசுவது மட்டுமல்லாமல், அதை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் முயற்சித்து வருகிறார். தனது யூடியூப் சேனலில், சமூக அரசியல் சிந்தனையாளர் பேராசிரியர் சுகதேவ் தோராட்டுடன் விரிவாகப் பேசியுள்ளார். “பிரதமர் மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பின் சாதக பாதகங்கள் குறித்து என்றாவது விவாதித்துள்ளாரா என்றால் பதில் இல்லை.
நீங்கள் சொன்னது போல், பொருளாதார வளங்களை யார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், குடியிருப்பு வசதிகள் மற்றும் வீட்டு வசதிகளை யார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், கல்வியை யார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்ற உண்மையை உடைத்துவிடும் – காரணம் பார்ப்பனர்கள் தான் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைக்குள் வைத்துள்ளனர் ஆகையால் தான் மோடி இதுகுறித்து பேசவே இல்லை.
“நவீன சமூக அமைப்பில் இந்த முறையை வெளிச்சம் போட்டுக் காட்டும், ஆகவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவா கூட்டங்கள் இதை விரும்பவில்லை. மற்றவர்களின் உரிமைகளை மறுப்பதன் மூலம் பார்ப்பனர்கள் பயனடைந்தனர். அதனால் தான் புரட்சியாளர் அம்பேத்கர் மிகச் சரியாகக் கூறினார். ஸநாதனிகள் சமத்துவத்திற்கே எதிரானவர்கள்” என்பது அதன் சாராம்சமாக அமைந்தது.
மோடி அரசுதான் செப்டம்பர் 2021இல் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமில்லை. இது நிர்வாக ரீதியாக கடினமான ஒரு பெரிய பணி என்று கூறியது.
அப்போது மகாராட்டிராவில் இந்தியா கூட்டணி ஆட்சி நடந்தது. மகாராட்டிரா காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது அதில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது கிராமப்புற இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளது.
பார்ப்பனர்களுக்கு பொருளாதாரத்தில் நலிந்தபிரிவினருக்கு என்று 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது யாருமே மூச்சுவிடவில்லை. இதுவரை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்களும், சிந்தனையாளர்களும், ஜாதி கணக்கெடுப்பு ஹிந்துத்துவத்தின் ஒற்றுமையை உடைத்துவிடும் அல்லது ஹிந்துத்துவ அரசியல் உருவாக்கிய ஒற்றுமை ஜாதி கணக்கெடுப்பால் சிதறிவிடும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிரதமர் மோடி, இந்திய மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் காங்கிரஸின் நோக்கம் இதுதான் என்றார்.
ராகுல் காந்திக்கு எதிர்ப்பு
சமீப காலம் வரை, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தியைத் தாக்கிக் கொண்டிருந்தனர். பாஜக எம்.பி. தினேஷ் ஷர்மாவின் அறிக்கை: “கும்பமேளாவில் யாரும் ஜாதியைக் கேட்கவில்லை, யாருக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை.
நீங்கள் இன்னும் ஸநாதன தர்மத்தின் சக்தியைப் புரிந்துகொள்ளாமல் ஜாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”. என்று ராகுல்காந்தியை கடுமையாக எதிர்த்துப் பேசினார். அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியைப் பற்றிக் கூறுகையில், “யாருடைய ஜாதி அவருக்கே தெரியாதோ, அவர் ஜாதி கணக்கெடுப்பைப் பற்றிப் பேசுகிறார்” என்றார்.
ராகுல் பதிலடி
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “நீங்கள் என்னை அவமானப்படுத்தலாம், ஆனால் இதே அவையில் ஜாதி கணக்கெடுப்பு மசோதா நிறைவேற்றப்படும்” என்று கூறினார். அகிலேஷ் யாதவும் ராகுல் காந்திக்கு ஆதரவாக நின்றார், அனுராக் தாக்கூரின் இந்த அறிக்கையை அவர் கண்டித்தார்.
ஏப்ரல் 2025இல், நாடு பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு கடுமையான பதிலுக்காகக் காத்திருந்த நேரத்தில். அப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் தேதி மற்றும் மாதம் கூட அறிவிக்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டது. இதை அறிவிக்க வேண்டும் என்றால், 2020 இல் நடந்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் – அதுபற்றிய அறிவிப்பு வரவில்லை. திடீரென வந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் இந்த முடிவின் மீது சந்தேகம் எழுகிறது.
ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைத்தது ஏன்?
இந்த முறை பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி 1500 கோடியில் இருந்து 570 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உண்மையிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அக்கறையோடு இருந்தால் அந்த நிதியை 1500 கோடியில் இருந்து 570 கோடியாகக் குறைத்திருக்க மாட்டார்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும், முன்பே நடந்திருக்க வேண்டும், இப்போதும் நடக்க வேண்டும். ஏனெனில் இது நாட்டின் உண்மையை அறிவதற்கான மிகப் பெரிய கண்ணாடி. அய்க்கிய முன்னணி (Samyukta Morcha) அரசு 1996-1997 இல் அமைச்சரவைக் கூட்டத்தில் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது. ஆனால் பின்னர் NDA-வின் வாஜ்பாய் அரசு அதைச் செயல்படுத்தவில்லை.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் வலுவான கோரிக்கையை , மறைந்த முலாயம் சிங் அவர்களும், மறைந்த சரத் யாதவ் அவர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பல நாள்கள் நாடாளுமன்றத்தை ,முடக்கினார்கள்
அதன் பிறகு, அப்போதைய பிரதமர், மறைந்த மன்மோகன் சிங் அவர்கள் சமூக பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்று உறுதி அளித்த பின்னரே நாடாளுமன்றம் நடைபெற அனுமதிக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரியபோது அவர்களை ‘ஜாதிவாதிகள்’ என்று அழைத்தவர்களுக்குக் சரியான பதிலடி கிடைத்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு நினைத்திருந்தால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான பணத்தை ஏன் குறைத்தது? மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த விரும்பியிருந்தால், பட்ஜெட்டிலேயே பணத்தை அதிகரித்து அதை அறிவித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி எண்ணிக்கை சேர்க்கப்படும் என்று மட்டுமே மோடி அரசு கூறியுள்ளது.
2020இல் இது நடந்திருக்க வேண்டும், ஆனால் மோடி அரசு அதைப் பற்றிப் பேசவில்லை. 5 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. கோவிட்-19க்குப் பிறகு 2023இல்கூட கணக்கெடுக்கப் படவில்லை. 2024இல் தேர்தல் என்று கூறிவிட்டார்கள். 2025 இல் நடப்பதற்கான அறிகுறிகளும் குறைவாகவே தெரிகிறது.
லாலு பிரசாத் மற்றும் மு.க.ஸ்டாலின், சித்தராமையா. ரேவந்த் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் தொடர்ந்து இது குறித்து பேசிவருகின்றனர். இப்போது ஒன்றிய அரசு அதற்கு அடிபணிய வேண்டியிருந்தது.